மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17
17
இயேசு மோசேயோடும் எலியாவோடும் காணப்படுதல்
(மாற்கு 9:2-13; லூக்கா 9:28-36)
1ஆறு நாட்கள் கழித்து, பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு இயேசு ஓர் உயரமான மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் மட்டும் தனியே இருந்தார்கள். 2சீஷர்கள் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே இயேசுவின் ரூபம் மாறியது. அவரது முகம் சூரியனைப்போலப் பிரகாசமானது. அவரது உடைகள் ஒளியைப் போன்று வெண்மையாயின. 3பின்பு, இருவர் வந்து பேசினார்கள். அவர்கள் மோசேயும் எலியாவும் ஆவார்கள்.
4பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாம் இங்கு வந்தது நல்லதாயிற்று. நீர் விரும்பினால், நான் இங்கு மூன்று கூடாரங்களை அமைக்கிறேன். உமக்கு ஒன்று, மோசேக்கு ஒன்று, எலியாவிற்கு ஒன்று” என்று கூறினான்.
5பேதுரு பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர்களுக்கு மேலாக ஒரு பிரகாசமான மேகம் வந்தது. மேகத்தினின்று ஒரு குரல் எழும்பி, “இவர் (இயேசு) எனது குமாரன். இவரிடம் நான் அன்பு செலுத்துகிறேன். நான் இவரிடம் பிரியமாக இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று சொன்னது.
6இயேசுவுடன் இருந்த சீஷர்கள் இதைக் கேட்டனர். மிகவும் பயந்து போன அவர்கள், தரையில் வீழ்ந்தார்கள். 7இயேசு அவர்களுக்கருகில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” எனக் கூறினார். 8தலையை உயர்த்திப் பார்த்த சீஷர்கள், இயேசு மட்டும் தனியே இருப்பதைக் கண்டார்கள்.
9இயேசுவும் சீஷர்களும் மலையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள், “மலை மீது கண்டவற்றை யாரிடமும் கூறாதீர்கள். மரணத்திலிருந்து மனிதகுமாரன் உயிர்த்தெழும்வரைப் பொறுத்திருங்கள். பின்னர் நீங்கள் கண்டவற்றை மக்களிடம் கூறலாம்” என்று இயேசு சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
10சீஷர்கள் இயேசுவிடம், “கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே, எலியா வருகை புரிய வேண்டுமென ஏன் வேதபாரகர் கூறுகிறார்கள்!” என்று கேட்டார்கள்.
11அதற்கு இயேசு, “எலியாவின் வருகை குறித்து அவர்கள் கூறுவது சரியே. மேலும், எவை எல்லாம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியே எலியா அவற்றை ஆயத்தம் செய்து வைப்பான். 12ஆனால், எலியா ஏற்கெனவே வந்துள்ளான். ஆனால், அவன் யாரென்பதை மக்கள் அறியவில்லை. மக்கள் பலவகையான துன்பங்களை அவனுக்குத் தந்தனர். மனித குமாரனுக்கும் அவ்வாறே அவர்களால் துன்பங்கள் ஏற்படும்” என்று பதிலளித்தார். 13யோவான் ஸ்நானகனே உண்மையில் எலியா என்பதை பிற்பாடு சீஷர்கள் உணர்ந்தார்கள்.
இயேசு ஒரு நோயாளிச் சிறுவனைக் குணமாக்குதல்
(மாற்கு 9:14-29; லூக்கா 9:37-43)
14இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். 15அவன், “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். 16உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான்.
17இயேசு, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். 18இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.
19பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள், “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
20அதற்கு இயேசு, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். 21உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்”#17:21 விசுவாசத்தையும் ஜெபத்தையும் மாத்திரம் பயன்படுத்தினால் அந்தவித ஆவி வெளியே வரும் என்று சில கிரேக்க பிரதிகளில் உள்ளன. என்று கூறினார்.
இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்
(மாற்கு 9:30-32; லூக்கா 9:43-45)
22பின்னர், இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் சந்தித்தார்கள். இயேசு சீஷர்களிடம் சொன்னார், “மனித குமாரன் மனிதர்களின் வசம் ஒப்புவிக்கப்படுவார். 23அவர்கள் தேவ குமாரனைக் கொல்லுவார்கள். ஆனால் மூன்றாம் நாள் தேவ குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார்” என்று சொன்னார். இயேசு கொலையாவார் என்பதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையுற்றனர்.
வரி கொடுப்பதைப்பற்றிப் போதனை
24இயேசுவும் சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். யூதர்கள் தேவாலயத்துக்குச் செலுத்தவேண்டிய வரியை வசூலிக்கும் ஆட்கள் சிலர், கப்பர்நகூமில் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஆலயத்திற்குக் செலுத்தவேண்டிய வரியை செலுத்துகிறாரா?” என்று கேட்டனர்.
25அதற்குப் பேதுரு, “ஆம், அவர் அந்த வரியைச் செலுத்துகிறார்” எனப் பதிலளித்தான்.
இயேசு தங்கியிருந்த வீட்டிற்குள் பேதுரு சென்றான். அவன் வாயைத் திறக்கும் முன்னமே, இயேசு, “மண்ணுலகில் இருக்கும் ராஜாக்கள் பலவகையான வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். வரி செலுத்துகிறவர்கள் யார்? ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்துகிறார்களா? அல்லது மற்றவர்கள் வரி செலுத்துகிறார்களா? நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
26அதற்கு பேதுரு, “மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்” என்று பதில் உரைத்தான்.
பிறகு இயேசு, “மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை. 27ஆனால், வரி வசூல் செய்யும் இவர்களை நாம் கோபமூட்ட வேண்டாம். எனவே, நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று மீன் பிடி. நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொன்னார்.
Currently Selected:
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 17: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International