YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 3

3
சமாதானப் பலிகள்
1“ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். 2அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து ஆசாரிப்புக் கூடார வாசலில் அதனைக் கொல்ல வேண்டும். அப்போது ஆரோனின் குமாரர்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 3சமாதான பலி கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலியாகும். பிறகு ஆசாரியன் மிருகத்தின் உள்பாகங்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும் காணிக்கையாக அளிக்கவேண்டும். 4அந்த மனிதன் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் சிறு குடல்களிலுள்ள கொழுப்பையும் முதுகின் கீழ் தசையின் மேலுள்ள கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள கொழுப்பையும் செலுத்த வேண்டும். அவற்றை சிறுநீரகங்களோடு நீக்க வேண்டும். 5பிறகு அதனை ஆரோனின் குமாரர்கள் பலிபீடத்தில் வைத்து எரிக்கும்படி நெருப்பின் நடுவில் இருக்கும் தகனபலியின் கட்டைகளின் மேல் இதை வைப்பார்கள். இது ஒருவகை தகன காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாகும்.
6“ஒருவன் கர்த்தருக்கு சமாதானப் பலியைப் படைக்க வேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டைக் கொண்டு வரலாம். அந்த ஆடு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் எவ்விதத்திலும் குறை இல்லாததாக இருக்க வேண்டும். 7அவன் பலியிடக்கூடிய ஆட்டுக்குட்டியுடன் வந்தால், அதை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்து, 8அவன் தன் மிருகத்தின் தலைமேல் தன் கையை வைக்க வேண்டும். பிறகு ஆசாரிப்புக் கூடாரத்தின் முன்னால் அதனைக் கொல்ல வேண்டும். ஆரோனின் குமாரர்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 9அவன் சமாதானப் பலியின் ஒரு பாகத்தை எரிக்கப்பட்ட பலியாக கர்த்தருக்கு அளிக்க வேண்டும். அவன் மிருகத்தின் கொழுப்பையும் கொழுப்பான வால் முழுவதையும், மிருகத்தின் உறுப்புகளின் உள்ளேயும் மேலும் படர்ந்துள்ள கொழுப்பையும் கொடுக்க வேண்டும். (அவன் அதனுடைய முதுகெலும்புக்கு அருகிலுள்ள வாலை வெட்ட வேண்டும்.) 10இரண்டு சிறுநீரகங்களையும், கொழுப்புத் தசைகளையும், கல்லீரலைச் சுற்றியுள்ள கொழுப்பு பகுதிகளையும் கொடுக்க வேண்டும். அவன் சிறுநீரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். 11பிறகு இவை அனைத்தையும் ஆசாரியன் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இவ்வாறு கர்த்தருக்காகப் படைக்கிற காணிக்கையே சமாதானப் பலியாகும். மேலும் இது ஜனங்களுக்கும் உணவாகிறது.
12“ஒருவன் சமாதானக் காணிக்கையாக வெள்ளாட்டைச் செலுத்த விரும்புவானேயானால் அவன் அதனை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வரவேண்டும். 13அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்னால் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் குமாரன் அதன் இரத்தத்தை பலிபீடத்தின் மேலும் அதனைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 14அவன் சமாதானக் காணிக்கையாக ஒரு பகுதியை நெருப்பில் எரித்து கர்த்தருக்குக் காணிக்கையாக்க வேண்டும். குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின் மேலிருக்கிற கொழுப்பையும், 15இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேல் உள்ள சிறு குடல்களில் உள்ள கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கூடக் கல்லீரலின் மேலுள்ள சதையையும் எடுத்து கர்த்தருக்குத் தகனபலியாகக் கொடுக்க வேண்டும். 16பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அவற்றை எரிக்க வேண்டும். சமாதானப் பலி நறுமண வாசனையாக கர்த்தருக்கு எரிக்கப்பட்டக் காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். இது ஜனங்களுக்கு உணவாகவும் இருக்கும். ஆனால் சிறப்பான பாகம் முழுவதும் கர்த்தருக்குரியது. 17கொழுப்பையும், இரத்தத்தையும் நீங்கள் உண்ணக்கூடாது. எங்கெங்குமுள்ள உங்கள் பரம்பரை முழுவதற்கும் இக்கட்டளை உரியது. நீங்கள் எங்கு வாழ நேர்ந்தாலும் கொழுப்பையோ, இரத்தத்தையோ, உண்ணக் கூடாது” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in