YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 2

2
யூதா உண்மையாக இல்லை
1கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி அவர், 2“எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம்,
“நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய்,
இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய்.
வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்;
விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள்.
3இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர்.
அவர்கள் கர்த்தரால் சேகரிக்கப்பட்ட முதல்கனியாக இருந்தனர்.
அவர்கள் காயப்படுத்த முயலும் எவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள்.
அத்தீயவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று சொல்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
4யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா?
அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா?
உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள்.
6உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார்.
கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார்.
கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார்,
ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை.
ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை,
ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்;
எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.
7கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும்,
ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள்.
நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன்,
ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.
8“‘கர்த்தர் எங்கே?’
என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை,
சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை,
இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்;
தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”
9எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.
10கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு,
மிகக் கவனமாகப் பார்,
எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
11எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா?
அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல!
ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு,
எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
12“வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13“எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள்,
(நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்).
அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள்.
(அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்).
ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன,
அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.
14“இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா?
அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா?
இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்?
15இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன,
சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன,
இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன,
அவர்களில் எவரும் மீதமில்லை.
16நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள்
உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்!
உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்,
ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள்.
18யூத ஜனங்களே, இதை நினையுங்கள்:
எகிப்துக்குப் போக இது உதவுமா?
நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை!
அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா?
ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை!
19நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள்,
அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும்.
அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும்.
இதைப்பற்றி சிந்தி!
பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்;
என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!”
இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது.
20“யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய்,
நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய்.
நீ வேசியைப்போன்று
மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய்.
21யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன்.
நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள்,
நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்?
22நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும்,
நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்”
என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
23“யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை,
நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்?
பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு,
நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள்.
24நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன்.
அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது,
அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது.
காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும்,
அதனைக் கண்டுபிடிப்பது எளிது.
25யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு!
அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து.
ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது,
அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன்,
அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய்.
26“ஒரு திருடன் பிடிபட்டபோது,
வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள்.
ராஜாக்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள்.
27அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்!
அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள்.
அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள்.
அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர்.
அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள்.
அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள்.
ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து,
‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள்.
28அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்! நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே?
நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்!
யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்!
29“ஏன் என்னோடு நீ வாதாடுகிறாய்?
நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30“யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன்.
ஆனால் அது உதவவில்லை.
நீங்கள் தண்டிக்கப்பட்டபோது
என்னிடம் திரும்பி வரவில்லை.
உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள். நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள்.
நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.”
31இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்!
“இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா?
நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா?
ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள்.
கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர்.
ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்?
32ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது.
ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது.
ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை.
33“யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும்.
நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள்.
34உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது!
இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம்.
உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை!
எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்!
35ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி.
தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய்.
எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன்.
ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய்.
36உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம்.
அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய்.
உதவிக்காக எகிப்திடம் போனாய்.
ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும்.
37எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய்.
உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய்.
நீ அந்த நாடுகளை நம்பினாய்,
ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 2