YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1

1
1இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் குமாரன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. 2கர்த்தர், யூதா நாட்டின் ராஜாவாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் குமாரனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில்#1:2 13வது … ஆண்டில் கி.மு. 627. எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். 3யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் குமாரன், யூதாவின் ராஜாவாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் குமாரனாக இருந்தான். சிதேக்கியா ராஜாவாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.
தேவன் எரேமியாவை அழைக்கிறார்
4கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
5“உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
6பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.
7ஆனால் கர்த்தர் என்னிடம்,
“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
8“எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
9பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,
“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
அழிக்கவும், கவிழ்க்கவும்,
கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.
இரண்டு தரிசனங்கள்
11மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார்.
நான் கர்த்தருக்கு, “நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்” என்றேன்.
12கர்த்தர் என்னிடம், “நீ நன்றாகப் பார்த்தாய். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் வரும் எனது வார்த்தைகளை சீக்கிரமாய் நிறைவேற்றுவேன், என்பதை உறுதி செய்கிறேன்” என்றார்.
13மீண்டும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். “நான் ஒரு பானையில் கொதிக்கிற தண்ணீரைப் பார்க்கிறேன், அந்தப் பானையின் வாய் வடக்கேயிருந்து பார்க்கிறது” என்றேன்.
14கர்த்தர் என்னிடம், “வடக்கிலிருந்து பயங்கரமான ஒன்று வரும்,
இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து ஜனங்களுக்கும் இது ஏற்படும்.
15மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார்.
இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார்.
“அந்நாடுகளில் உள்ள ராஜாக்கள் வந்து எருசலேமின் வாசலருகில்
தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள்,
அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள்,
மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.
16நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன்.
அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன்.
அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள்.
எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர்,
அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
17“ஆகவே எரேமியா, தயாராயிரு,
எழுந்து நில், ஜனங்களோடு பேசு,
நான் உன்னிடம் சொன்னவற்றையெல்லாம் நீ அவர்களுக்குச் சொல்.
ஜனங்களைப் பார்த்து பயப்படாதே,
நீ ஜனங்களுக்குப் பயந்தால்,
பிறகு அவர்களுக்கு நீ பயப்படும்படி நல்ல காரணங்களைத் தருவேன்.
18என்னைப் பொருத்தவரை, இன்று உன்னை
பாதுகாப்பான நகரத்தைப்போன்று வலிமையானவனாக ஆக்குவேன்,
இரும்புத் தூண் போலவும்,
வெண்கலச்சுவர் போலவும் செய்வேன்.
தேசத்திலுள்ள எல்லாவற்றுக்கும் முன்பும்,
யூதா நாட்டிலுள்ள ராஜாக்களுக்கு முன்பும்,
யூதாவின் தலைவர்களுக்கு முன்பும்,
யூதாவின் ஆசாரியர்களுக்கு முன்பும்,
யூதாநாட்டின் ஜனங்களுக்கு முன்பும் நிற்க முடிந்த ஒருவனாக ஆவாய்.
19அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்,
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்,
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in