எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6
6
1ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். 2ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். 3தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.
4-6கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.
7அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும். 8ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும்.
9அன்பான நண்பர்களே, நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் உங்களிடமிருந்து சிறப்பானவற்றை எதிர்பார்க்கிறோம். இரட்சிப்பிற்குரியதை நீங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 10தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார். 11நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற இரட்சிப்பை அடையும் பொருட்டு உங்கள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். 12நீங்கள் சோம்பேறியாவதை நாங்கள் விரும்பவில்லை. தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெறப்போகிற மக்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் இருப்பதால் அவர்கள் தேவனுடைய வாக்குறுதியைப் பெறுவார்கள்.
13தேவன் ஆபிரகாமிடம் ஒரு ஆணையிட்டார். மேலும் ஆணையிட்டுச் சொல்ல தேவனைவிட மிகப் பெரியவர் யாரும் இல்லாததால், 14“நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்”#ஆதி. 22:17 என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார். 15இது நிகழும் வரை ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்தான். இறுதியில் அவன் தேவனுடைய வாக்குறுதியின்படியே பெற்றுக்கொண்டான்.
16மக்கள் தங்களைவிடப் பெரியவர்கள் பேரில் ஆணையிடுவார்கள். அவர்கள் சொல்வது உண்மை என்பதை இந்த ஆணை நிரூபித்து, மேலும் விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. 17தேவன் தன் வாக்குறுதியை உண்மையென்று நிரூபிக்க விரும்பினார். தன் ஆணையால் அதனை உறுதிப்படுத்தினார். தனது நோக்கம் மாறாதது என்று காண்பிக்க தேவன் விரும்பினார். அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். 18அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார்.
ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும். 19நமக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது. இது நங்கூரம் போன்றது. அது உறுதியும் வலிமையும் உடையது. அது நமது ஆன்மாவைக் காப்பாற்றும். மிகவும் பரிசுத்தமான இடங்களுக்கு அது போகிறது. பரலோகத்து ஆலயத்தின் திரைக்குப் பின்னாலும் போகிறது. 20இயேசு ஏற்கெனவே அங்கே நுழைந்திருக்கிறார். நமக்காக அங்கே வழியைத் திறந்திருக்கிறார். இயேசு பிரதான ஆசாரியராகி மெல்கிசேதேக்கைப்போல் நிலைத்திருக்கிறார்.
Currently Selected:
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International