YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3

3
எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்
1சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 2கெட்ட, தீய மனிதர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (எல்லா மக்களும் கர்த்தரிடம் விசுவாசம் வைக்கவில்லை)
3ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார். 4மேலும், நாங்கள் வழி காட்டியபடியே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றும், இனி மேலும் நடந்துகொள்வீர்கள் என்றும் உங்களைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 5தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
வேலைக்கான பொறுப்புகள்
6சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. 7நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. 8அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும், மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். 9எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். 10“ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.
11உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். 12மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். 13சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள்.
14இந்த நிருபத்தில் சொல்லப்பட்டவற்றிற்கு எவனொருவன் பணிய மறுக்கிறானோ அவன் யாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவனோடு சேராதீர்கள். பிறகு அதற்காக அவன் வெட்கப்படுவான். 15ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள்.
இறுதி வார்த்தைகள்
16சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
17பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.
18நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 3