YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் 1

1
1மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும்#1:1 பெண் இது ஒரு பெண்ணைக் குறிக்கலாம். அல்லது இந்த நிருபத்தில் ஒரு சபையையும் குறிக்கும் என்றால், அவளுடைய குழந்தைகள் என்பது சபையின் மக்களைக் குறிக்கும். அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். 2நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.
3பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.
4உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். 5இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். 6நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.
7இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். 8எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
9கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.
12நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in