YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5

5
தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்
1இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். 2நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். 3தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. 4ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். 5நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.
தேவன் நமக்கு அவரது குமாரனைக் குறித்துக் கூறினார்
6இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். 7எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. 8ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.
9சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். 10தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. 11இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. 12குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.
நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு
13தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.
16கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.
18தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5