கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 6
6
பிரச்சனைகளைத் தீர்த்தல்
1உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
9-10தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.
சரீரம்-தேவ மகிமைக்கு
12“எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், அனைத்துப் பொருள்களும் நல்லவை அல்ல. “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன். 13“வயிற்றுக்கு உணவு. உணவுக்காக வயிறு” ஆம். ஆனால் தேவன் இரண்டையும் அழிப்பார். சரீரம் பாலுறவு தொடர்பான பாவத்திற்காக அமைந்ததன்று. ஆனால் சரீரம் கர்த்தருக்குரியது. மேலும் கர்த்தர் சரீரத்துக்குரியவர். 14தேவனுடைய வல்லமையால் தேவன் கர்த்தராகிய இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார். தேவன் நம்மையும் மரணத்தினின்று எழுப்புவார். 15உங்கள் சரீரமும் கிறிஸ்துவின் பாகங்கள் என்பது உங்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியும். எனவே, நான் கிறிஸ்துவின் பாகங்களை எடுத்து ஒரு வேசியின் பாகங்களோடு சேர்க்கக் கூடாது. 16“இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும். 17ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்.
18உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான். 19பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. 20தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
Currently Selected:
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 6: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International