கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7
7
திருமணம் குறித்த போதனைகள்
1இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 2ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். 3ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். 4மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. 5கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். 6நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. 7எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.
8திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. 9ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.
10திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. 11ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.
12மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 13விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. 14விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள்.
15விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார். 16மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள்.
தேவன் அழைத்தபடியே வாழுங்கள்
17தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
திருமணம் குறித்த கேள்விகள்
25திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
29சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.
32நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம் ஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
36ஒருவனின் குமாரத்தி திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய குமாரத்தியைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான்.#7:36-38 இன்னொரு மொழிபெயர்ப்பு: 36 தான் தன் கன்னிக்கு நியாயம் செய்யவில்லை என்று ஒருவன் நினைக்கலாம். அப்பெண் திருமணத்துக்குரிய நல்ல வயதைத் தாண்டியிருக்கலாம். எனவே அவன் அவளை மணந்துகொள்ள எண்ணலாம். அவன் விரும்புவதைச் செய்யலாம். அவர்கள் மணந்துகொள்ளலாம். இதில் பாவமில்லை. 37 ஆனால் அடுத்தவர்களுக்கு அவன் மனம் பற்றிய உறுதி இருக்கவேண்டும். அங்கு திருமணத்திற்குத் தேவை இல்லாமல் இருந்தால் அவன் செய்வதில் சுதந்திரம் உள்ளது. அவன் மனமாற அக்கன்னிப் பெண்ணைத் திருமணமாகாமல் வைத்திருக்க எண்ணினால் அவன் சரியானவற்றையே செய்யவேண்டும். 38 எனவே ஒருவன் கன்னியை மணந்துகொள்வதும் சரியே.
39எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.
Currently Selected:
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International