YouVersion Logo
Search Icon

சங்கீதம் 22

22
சங்கீதம் 22
“காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமல்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை;
இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
3ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்
நீர் பரிசுத்தர்.
4உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்;
நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர்.
5அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்;
உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
6ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல;
மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்;
அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள்
8“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான்,
யெகோவா அவனை இரட்சிக்கட்டும்.
அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால்
அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
9ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர்.
நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே
என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.
10நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்;
நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
11நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்;
ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது,
உதவிசெய்ய ஒருவருமில்லை.
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன;
பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன.
13தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல,
அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள்.
14என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது;
என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின;
என் இருதயம் மெழுகு போலாகி
எனக்குள்ளே உருகிப் போயிற்று.
15என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று;
என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது;
என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
16நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது;
என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
17என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்;
மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
18அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு,
என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
19ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்;
என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
20என்னை வாளுக்குத் தப்புவியும்;
என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும்.
21சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்;
காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
22அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன்,
திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
23யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்;
இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள்.
24ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை,
அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை.
அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை;
ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.
25நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்;
உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக
நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
26ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்;
அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
27பூமியின் கடைசிகளெல்லாம்
யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்;
நாடுகளின் குடும்பங்கள் எல்லாம்
அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும்.
28ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது;
அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
29பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்;
மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்
அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள்.
30பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்;
வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும்.
31அவர்கள் அவருடைய நீதியை,
இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்:
அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in