YouVersion Logo
Search Icon

நீதிமொழி 14

14
1ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்;
ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள்.
2நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள்,
அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள்.
3மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி;
ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும்.
4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்;
ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு.
5மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள்,
ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள்.
6ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை,
ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது.
7மூடரின் வழியைவிட்டு விலகியிரு,
ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய்.
8தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம்,
ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
9பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள்,
ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது.
10ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்;
அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது.
11கொடியவர்களின் வீடு அழிக்கப்படும்,
ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும்.
12மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு;
முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;
மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம்.
14பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்;
நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள்.
15அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்;
ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள்.
16ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்;
ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்.
17முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்;
தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான்.
18அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்;
ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது.
19தீயவர்கள் நல்லவர்கள் முன்னும்,
கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள்.
20ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்;
ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு.
21தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்;
ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
22தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா?
ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள்.
23கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்;
ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும்.
24ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம்,
ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது.
25மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது,
ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது.
26யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு;
அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம்.
27யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று;
அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
28அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை,
ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான்.
29பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்;
ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
30மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது;
ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது.
31ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்;
ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள்.
32பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்;
ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள்.
33பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது;
மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை.
34நீதி ஒரு நாட்டையே உயர்த்தும்,
ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம்.
35ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான்,
ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in