YouVersion Logo
Search Icon

நீதிமொழி 13

13
1ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்;
ஆனால் ஏளனக்காரர்களோ கண்டிப்புக்கு செவிகொடுப்பதில்லை.
2மனிதர் தன் வாயின் வார்த்தையினால் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்,
ஆனால் உண்மையற்றவர்கள் வன்முறைகளையே விரும்புகிறார்கள்.
3தங்கள் நாவைக் காத்துக்கொள்பவர்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்,
ஆனால் முன்யோசனையின்றி பேசுபவர்கள் அழிவுக்குள்ளாகிறார்கள்.
4சோம்பேறிகள் ஆசைப்பட்டும் ஒன்றும் பெறாமலிருக்கிறார்கள்;
ஆனால் சுறுசுறுப்புள்ளவர்களின் ஆசைகளோ முற்றிலும் நிறைவேறுகின்றன.
5நீதிமான்கள் பொய்யானவற்றை வெறுக்கிறார்கள்,
ஆனால் கொடியவர்கள் வெட்கத்தையும்
அவமானத்தையும் கொண்டுவருகிறார்கள்.
6உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்;
ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும்.
7சிலர் ஒன்றுமில்லாமல் பணக்காரர்களைப் போல பாசாங்கு செய்வார்கள்;
வேறுசிலர் அதிக செல்வமிருந்தும் ஏழையைப்போல் பாசாங்கு செய்வார்கள்.
8பயமுறுத்தப்படும்போது பணக்காரர் தம் செல்வத்தைத் தந்து அவருடைய வாழ்வை மீட்கலாம்,
ஆனால் ஏழையோ பயமுறுத்தல் எதையுமே கேள்விப்படுவதில்லை.
9நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது,
ஆனால் கொடியவர்களின் விளக்கோ அணைக்கப்படும்.
10அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது,
ஆனால் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவர்களிடத்தில் ஞானம் காணப்படும்.
11தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும்,
ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள்.
12எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்;
ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும்.
13அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்;
ஆனால் கட்டளைகளை மதிக்கிறவர்களோ பலனைப் பெறுவார்கள்.
14ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று;
அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது.
15நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள்,
ஆனால் உண்மையற்றவர்களின் வழி கேடு விளைவிக்கும்.
16விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்;
ஆனால் மூடர்களோ தங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
17கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான்,
ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான்.
18அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்;
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்கிறவர்கள் புகழப்படுவார்கள்.
19வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது,
ஆனால் தீமையைவிட்டு விலகுவதையோ மூடர் வெறுக்கிறார்கள்.
20ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்;
ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள்.
21பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது,
ஆனால் நன்மை நீதிமான்களின் வெகுமதி.
22ஒரு நல்ல மனிதர் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பரம்பரை சொத்துக்களை விட்டுச்செல்கிறார்;
ஆனால் பாவிகளின் செல்வமோ, நீதிமான்களுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது.
23ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம்,
ஆனால் அநீதி அதை அழித்திடும்.
24பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்;
ஆனால் தன் பிள்ளைகள்மீது அன்பாயிருக்கிறவர்களோ அவர்களை நற்கட்டுப்பாட்டில் நடத்துவார்கள்.
25நீதிமான்கள் தங்கள் உள்ளம் திருப்தியாகுமட்டும் சாப்பிடுவார்கள்;
ஆனால் கொடியவர்களின் வயிறோ பசியாயிருக்கும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in