YouVersion Logo
Search Icon

நீதிமொழி 10

10
சாலொமோனின் நீதிமொழிகள்
1சாலொமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்;
ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
2நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது,
ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
3யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை,
ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
4சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும்,
ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
5கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்;
ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
6நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்;
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
7நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்;
ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
8இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்;
ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
9நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள்,
ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
10தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்;
அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
11நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று,
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
12பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது;
அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
13பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது,
ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
14ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது.
15பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு.
16நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு,
ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள்.
17நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்;
ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
18பகையை மறைப்பவன் பொய்யன்;
அவதூறு பரப்புகிறவன் மூடன்.
19அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது;
ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
20நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி,
ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது.
21நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்;
ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
22யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது;
அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
23தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது;
ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
24கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்;
நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும்.
25சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்;
ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
26பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ,
சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
27யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும்,
ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும்,
ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
29யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம்,
ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
30நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை;
ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
31நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும்,
ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
32நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்;
ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in