YouVersion Logo
Search Icon

நீதிமொழி 11

11
1கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார்,
ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம்.
2அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்;
ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும்.
3உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்;
ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது.
4நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது;
ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும்.
5குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்;
ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும்.
6நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்;
ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள்.
7கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்;
அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும்.
8நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்;
கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள்.
9இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்;
ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள்.
10நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்;
கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
11நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்;
ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும்.
12மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்;
ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குகிறார்கள்.
13புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்;
ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
14ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது,
ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும்.
15இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்;
ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
16இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்;
ஆனால் உழைக்கும் மனிதர்களோ செல்வத்தை மட்டுமே சேர்ப்பார்கள்.
17இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்;
ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள்.
18கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்;
ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள்.
19உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்;
ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள்.
20யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்;
ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
21இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்,
ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள்.
22புத்தியில்லாத பெண்ணின் அழகு
பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது.
23நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும்,
ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
24ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்;
இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார்.
25தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்;
மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.
26தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்;
ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள்.
27நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்;
தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும்.
28தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்,
ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள்.
29தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்;
மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள்.
30நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம்,
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள்.
31நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால்,
இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy