YouVersion Logo
Search Icon

நெகேமியா 4

4
திருத்திக் கட்டுதலுக்கு எதிர்ப்பு
1நாங்கள் திரும்பவும் மதிலைக் கட்டத் தொடங்கியதை சன்பல்லாத் கேள்விப்பட்டபோது, கோபங்கொண்டு, கடும் சீற்றமடைந்தான். அவன் யூதரை அவமதித்து, 2தன்னுடைய கூட்டாளிகளுக்கும் சமாரிய இராணுவத்திற்கும் முன்பாக, “பலவீனமான இந்த யூதர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் மதிலைத் திரும்பவும் கட்டுவார்களோ? அவர்கள் பலிகளைச் செலுத்துவார்களோ? ஒரே நாளில் முடித்து விடுவார்களோ? இடிபாட்டுக் குவியல்களில் கருகிப்போன கற்களைத் திரும்பவும் உயிர்ப்பிப்பார்களோ?” என்றான்.
3சன்பல்லாத்தின் அருகே நின்ற அம்மோனியனான தொபியா, “அவர்கள் என்ன கட்டுகிறார்கள்? அதற்கு மேலாக ஒரு நரி ஏறினாலும்கூட அவர்களின் கல்மதில் உடைந்துவிடும்” என்று கூறினான்.
4எங்கள் இறைவனே, எங்களுக்குச் செவிகொடும்; ஏனெனில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். அவர்களின் ஏளனங்களை அவர்கள் தலைமீதே திருப்பிவிடும். அவர்களை சிறைப்பிடிக்கும் ஒரு நாட்டுக்குக் கொள்ளைப்பொருளாக ஒப்புக்கொடும். 5அவர்களுடைய குற்றத்தை மூடாதிரும்; உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றி விடாதிரும்; ஏனெனில் கட்டுபவர்களை முகத்துக்கு முன்பாகவே மனவேதனை உண்டாகும்படி செய்தார்களே.
6மக்கள் முழு இருதயத்துடன் வேலைசெய்தபடியால் நாங்கள் மதிலை அதன் பாதி உயரத்திற்குக் கட்டி முடித்தோம்.
7ஆனால் எருசலேம் மதிலின் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், அதன் பிளவுகள் திருத்தப்படுகின்றன என்றும் சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர் ஆகியோர் கேள்விப்பட்டபோது கோபம் கொண்டார்கள். 8எருசலேமுக்கு விரோதமாக வந்து சண்டையிடவும், அதற்கு எதிராகக் கலகம் உண்டுபண்ணவும் அவர்கள் ஒன்றுகூடி சதி செய்தார்கள். 9ஆனால் நாங்களோ எங்கள் இறைவனிடம் ஜெபம்பண்ணி, இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரவும் பகலும் ஒரு காவலை ஏற்படுத்தினோம்.
10இதற்கிடையில் யூதாவின் மக்களோ, “வேலையாட்களின் பெலன் குறைந்திருக்கிறது, இடிபாட்டுக் குவியலோ அதிகமாயிருக்கிறது; அதனால் மதிலைக் கட்ட எங்களால் முடியாது” என்றார்கள்.
11அதேவேளையில் எங்கள் பகைவர்கள், “அவர்கள் எங்கள் திட்டத்தை அறியவோ, எங்களைக் காணவோ முன்பதாக நாங்கள் அவர்களுக்குள்ளே இருந்து அவர்களைக் கொன்று அந்த வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார்கள்.
12அந்த வார்த்தைகளை எங்கள் பகைவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் கேள்விப்பட்டு, எங்களிடம் வந்து, “நீங்கள் எங்கு திரும்பினாலும் அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று கிட்டத்தட்ட பத்து தடவைகள் சொன்னார்கள்.
13அதனால் நான்: மதிலின் பின்னே மிகத் தாழ்வான இடங்களில் திறந்தவெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள்கள், ஈட்டிகள், வில்லுகள் ஆகியவற்றுடன் காவல் செய்யும்படி நிறுத்தி வைத்தேன். 14அப்பொழுது ஏற்பட்டிருந்த சூழ்நிலையைக் கண்ட நான் எழுந்து நின்று, உயர்குடி மனிதர்களிடமும், அதிகாரிகளிடமும், மீதியாயிருந்த மக்களிடமும், “அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். மகத்துவமுள்ளவரும், பயபக்திக்குரியவருமாயிருக்கிற யெகோவாவை நினைத்து, உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவிகள் ஆகியோருக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் போராடுங்கள்” என்றேன்.
15எங்கள் பகைவர்களின் திட்டம் எங்களுக்குத் தெரியவந்ததென்றும், இறைவன் அதை முறியடித்துவிட்டார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள்; நாங்களோ யாவரும் மீண்டும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16அன்றிலிருந்து எனது வேலைக்காரர்களில் பாதிப்பேர் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், மற்ற பாதிப்பேர் காவல் செய்யும்படி ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள், கவசம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகளோ யூதா நாட்டு மக்களுக்குப் பின்னாக நின்று மேற்பார்வையிட்டனர். 17கட்டடப் பொருட்களைத் தூக்குபவர்கள் ஒரு கையால் வேலைசெய்தார்கள். ஆனால் மற்றக் கையில் ஆயுதம் பிடித்திருந்தார்கள். 18கட்டுகிறவர்களில் ஒவ்வொருவனும் தான் வேலை செய்கையில் தனது இடுப்பில் வாளை சொருகியிருந்தான். தேவையானபோது எச்சரிக்கை செய்வதற்கு, எக்காளம் ஊதுகிறவர்கள் என்னோடு நின்றார்கள்.
19அப்பொழுது நான் உயர்குடி மக்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற மக்களிடமும், “எங்கள் வேலை பெரிதும் விசாலமானதாய் இருக்கிறது, நாங்களும் சுவர் நெடுகிலும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் பிரிந்திருக்கிறோம். 20நீங்கள் எங்கே எக்காள சத்தத்தைக் கேட்டாலும், அங்கே எங்களுடன் வந்துசேருங்கள். நம்முடைய இறைவன் நமக்காக யுத்தம் செய்வார்” என்று கூறினேன்.
21அதன்படி அதிகாலை வெளிச்சத்திலிருந்து நட்சத்திரங்கள் வானில் தோன்றும்வரை எங்களில் பாதிப்பேர் ஈட்டியைப் பிடித்தவர்களாக நிற்க, நாங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தோம். 22மேலும் நான் மக்களிடம், “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உதவியாளனும் எருசலேமுக்குள்ளேயே இரவைக் கழிக்கும்படி செய்யுங்கள்; அப்பொழுது அவர்கள் இரவில் காவலர்களாகவும், பகலில் வேலையாட்களாகவும் நமக்கு வேலை செய்யலாம்” என்றேன். 23அப்படியே நானோ, என்னுடன் இருந்த சகோதரரோ, எனது மனிதரோ, எனது காவலரோ எங்கள் உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவனும் தண்ணீருக்கு போனபோதும்கூட, எங்கள் வலதுகையில் ஆயுதம் தாங்கியபடியே இருந்தோம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in