YouVersion Logo
Search Icon

நெகேமியா 3

3
எருசலேமின் மதிலைத் திரும்பக்கட்டுதல்
1பிரதான ஆசாரியன் எலியாசீபும், அவனுடைய உடன் ஆசாரியரும் மதிலில் வேலைசெய்வதற்காகப் போய் செம்மறியாட்டு வாசலைத் திரும்பவும் கட்டினார்கள். அவர்கள் அதை அர்ப்பணம் செய்து, அதன் கதவுகளை அதற்குரிய இடத்தில் அமைத்தார்கள். அவர்கள் மதிலை நூறுபேரின் கோபுரம்வரை கட்டி, அதை அர்ப்பணம் செய்தார்கள்; தொடர்ந்து அனானயேலின் கோபுரம்வரையிலும் கட்டினார்கள். 2அதை அண்டியுள்ள பகுதியை எரிகோவின் மனிதர் கட்டினார்கள். அதை அடுத்துள்ள பகுதியை இம்ரியின் மகன் சக்கூர் கட்டினான்.
3மீன்வாசல் அசெனாவின் மகன்களால் திரும்பக் கட்டப்பட்டது. மரத்தாலான உத்திரங்களைப் போட்டு, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும், அந்தந்த இடங்களில் வைத்தார்கள். 4அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத் அதற்கடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக மெஷேசாபேலின் மகனான பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்தான்; அவனுக்கு அடுத்தாக பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தான். 5அடுத்துள்ள பகுதி தெக்கோவா மனிதர்களால் பழுதுபார்க்கப்பட்டது; ஆனால் அவர்களுடைய உயர்குடி மக்கள் அவர்களுடைய மேற்பார்வையாளர்களின்கீழ் வேலைசெய்ய தோள்கொடுத்து#3:5 அவர்கள் பணியில் பங்கெடுக்கவில்லை. உதவவில்லை.
6பழைய வாசல், பாசெயாவின் மகன் யோய்தாவினாலும், பேசோதியாவின் மகன் மெசுல்லாமினாலும் திருத்தியமைக்கப்பட்டது. அவர்கள் அதன் மரத்தாலான உத்திரங்களை அமைத்து, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். 7அத்துடன் அவர்களுக்கு அடுத்ததாக கிபியோன், மிஸ்பா ஊர்களின் மனிதர்களால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. இவர்களுடன் கிபியோனைச் சேர்ந்த மெலெத்தியாவும், மெரொனோத்தியனான யாதோனும் இருந்தார்கள். இவ்விடங்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் ஆளுநரின்கீழ் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகும். 8அடுத்துள்ள பகுதியை பொற்கொல்லர்களில் ஒருவனான அர்காயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தான்; அவனைத் தொடர்ந்து நறுமண தைலம் செய்பவர்களுள் ஒருவனான அனனியா திருத்த வேலைகளைச் செய்தான்; இவர்கள் எருசலேமின் அகலமான மதில்வரைக்கும் எருசலேமைப் புதுபித்தார்கள். 9அடுத்ததாக எருசலேம் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த ஊரின் மகனான ரெப்பாயா திருத்த வேலைகளைச் செய்தான். 10அருமாப்பின் மகன் யெதாயா தன் வீட்டுக்கு முன்னுள்ள அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்ததாக ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தான். 11இன்னொரு பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கியாவும், பாகாத் மோவாபின் மகன் அசூபும் பழுது பார்த்தனர். 12எருசலேம் மாவட்டத்தின் மற்ற பாதிப் பகுதியின் ஆளுநனான அலோகேசின் மகன் சல்லூம், தனது மகள்களின் உதவியுடன் அடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான்.
13ஆனூனினாலும், சனோவாகின் குடிகளினாலும் பள்ளத்தாக்கு வாசல் பழுதுபார்க்கப்பட்டது. அவர்கள் அதைத் திரும்பவும் கட்டி, கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடங்களிலே வைத்தார்கள். அத்துடன் குப்பைமேட்டு வாசல்வரை ஆயிரம் அடி சுவரைத் திருத்தி அமைத்தார்கள்.
14ரேகாபின் மகனும், பெத்கேரேமின் மாவட்டத்தின் ஆளுநனுமான மல்கியா குப்பைமேட்டு வாசலைத் திருத்திக் கட்டினான். அவன் அதைத் திரும்பவும் கட்டி, அதற்குரிய கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அந்தந்த இடங்களில் அமைத்தான்.
15கொல்கோசேயின் மகனும், மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநனுமான சல்லூம் ஊற்று வாசலைத் திருத்திக் கட்டினான். அவன் அதைத் திரும்பக் கட்டி, கூரையை அமைத்து, அதற்குரிய கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அந்தந்த இடத்தில் அமைத்தான். அத்துடன் அவன் தாவீதின் நகரத்திலிருந்து செல்லுகிற படிக்கட்டுவரை, அரசனின் தோட்டத்தின் அருகேயுள்ள சீலோவாம் குளத்தின் மதிலையும் திருத்தி அமைத்தான். 16அவனுக்கு அப்பால் அஸ்பூக்கின் மகனும், பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனுமான நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரேயுள்ள வெட்டப்பட்ட குளமும், மாவீரர் மண்டபமும் இருக்கிற இடம்வரையிலும் மதிலின் திருத்த வேலையைச் செய்தான்.
17அவனுக்கு அடுத்ததாக பானியின் மகன் ரேகூமின் தலைமையின்கீழ் லேவியரால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அவனுக்கு அருகே கேயிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனான அசபியா தன் மாவட்டத்தின் திருத்த வேலைகளை செய்தான். 18அவனுக்கு அடுத்ததாக அவர்களுடைய நாட்டு மக்களான மற்ற சகோதரரால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. கேயிலா மாவட்டத்தின் மறுபகுதிக்கு ஆளுநனான எனாதாதின் மகன் பவ்வாயின்#3:18 அதிகமான எபிரெய மொழி கையெழுத்துப் பிரதிகளில் பவ்வாயின் எனவும்; எபிரெய வேதத்தின் கிரேக்க பிரதிகளில் பின்னூய் எனவும் உள்ளது (வசனம் 24) தலைமையின்கீழ் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. 19அவனுக்கு அடுத்ததாக மிஸ்பாவின் ஆளுநனான யெசுவாவின் மகன் ஏஸெர், மேட்டை எதிர்நோக்கியுள்ள இடத்திலிருந்து மதிலின் மூலையிலுள்ள ஆயுத களஞ்சியம்வரைக்கும் இன்னொரு பகுதியைப் பழுதுபார்த்தான். 20அவனுக்கு அடுத்தாக அந்த மூலையிலிருந்து பிரதான ஆசாரியன் எலியாசீபின் வீட்டு வாசல்வரையுள்ள மற்றுமொரு பகுதியை சபாயின் மகனான பாரூக் ஆர்வத்துடன் பழுதுபார்த்தான். 21அவனுக்குப்பின் அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத், எலியாசீபின் வீட்டு வாசலிலிருந்து வீட்டின் முடிவு வரையுள்ள இன்னொரு பகுதியைப் பழுதுபார்த்தான்.
22அவனுக்கு அடுத்தாக திருத்த வேலைகள் சுற்றுப்புறங்களிலுள்ள ஆசாரியர்களினால் செய்யப்பட்டன. 23அவர்களுக்கு அடுத்தாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீடுகளின் எதிரேயுள்ள பகுதிகளில் திருத்த வேலைகளைச் செய்தார்கள். அவர்களுக்கு அடுத்ததாக, அனனியாவின் மகனாகிய மாசெயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே திருத்த வேலைகளைச் செய்தான். 24அவனுக்கு அடுத்தாக எனாதாதின் மகன் பின்னூய் அசரியாவின் வீட்டிலிருந்து மதிலின் வளைவும் மூலையும் உள்ள இடம்வரைக்கும் உள்ள இன்னொரு பகுதியைத் திருத்திக் கட்டினான். 25ஊசாயின் மகன் பாலால் வளைவிற்கு எதிரேயும், காவலரின் முற்றத்திற்கு அருகேயுள்ள உயர்ந்திருக்கும் அரண்மனையிலிருந்து வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் உள்ள திருத்த வேலையைச் செய்தான். அவனுக்கு பின்பு பாரோஷின் மகன் பெதாயாவும், 26ஓபேல் குன்றில் வாழ்ந்த ஆலய பணியாட்களும் அதற்குப்பின் கிழக்கு நோக்கியிருக்கிற தண்ணீர் வாசலின் எதிரேயுள்ள இடம்வரை உயர்ந்துள்ள கோபுரம்வரை திருத்த வேலைகளைச் செய்தார்கள். 27அவர்களை அடுத்து, தெக்கோவாவின் மனிதர் வெளிநோக்கி உயர்ந்துள்ள பெரிய கோபுரத்திலிருந்து ஓபேல் மதில்வரை மற்றுமொரு பகுதியைத் திருத்திக் கட்டினார்கள்.
28குதிரை வாசலுக்கு முதற்கொண்டு ஆசாரியர்கள் ஒவ்வொருவரும் தன்தன் வீட்டுக்கு முன்பாக திருத்த வேலைகளைச் செய்தனர். 29அவர்களுக்கு அடுத்து இம்மேரின் மகன் சாதோக் தன் வீட்டின் எதிரே திருத்த வேலைகளைச் செய்தான். அவனுக்கு அடுத்து கிழக்கு வாசலின் காவலனும், செக்கனியாவின் மகனுமான செமாயா திருத்த வேலைகளைச் செய்தான். 30அவனுக்கு அடுத்ததாக செலேமியாவின் மகன் அனனியாவும், சாலாப்பின் ஆறாவது மகனான ஆனூனும் இன்னொரு பகுதியைத் திருத்திக் கட்டினார்கள். அவர்களுக்கு அடுத்ததாக பெரகியாவின் மகன் மெசுல்லாம் தனது இருப்பிடத்தின் எதிரே திருத்திக் கட்டினான். 31அவனுக்கு அடுத்து பொற்கொல்லரில் ஒருவனான மல்கியா, ஆய்வு வாசலுக்கு எதிரேயுள்ள ஆலய பணியாட்கள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் வரைக்கும் மூலைக்கு மேலுள்ள அறையின் பகுதியையும் திருத்திக் கட்டினான். 32மூலையிலுள்ள மேல்மண்டபத்துக்கும் செம்மறியாட்டு வாசலுக்கும் இடையிலுள்ள பகுதியை பொற்கொல்லரும் வர்த்தகரும் திருத்திக் கட்டினார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in