YouVersion Logo
Search Icon

யோபு 27

27
யோபுவின் நண்பர்களுக்கு அவருடைய இறுதி வார்த்தை
1யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
2“எனக்கு நீதியை மறுத்து,
வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,
3எனக்குள் என் உயிரும்,
என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
4என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது,
என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
5நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்;
நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.
6என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்;
நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.
7“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும்,
என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.
8இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய்,
இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?
9அவனுக்குத் துன்பம் வரும்போது
இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?
10எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ?
எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?
11“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்;
எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
12இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும்
ஏன் இந்த வீண்பேச்சு?
13“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும்,
தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
14அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள்,
ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
15அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது,
அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
16அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும்,
உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,
17அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள்,
குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
18அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும்,
காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.
19அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்;
அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
20பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன;
இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.
21கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்;
அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.
22அது இரக்கமின்றி அவனை விரட்டும்;
இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.
23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து,
அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”

Currently Selected:

யோபு 27: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in