YouVersion Logo
Search Icon

யோபு 28

28
இடைவெளி: ஞானம் எங்கே காணப்படுகிறது
1வெள்ளிக்குச் சுரங்கமும்
தங்கத்திற்கு சுத்திகரிக்கும் இடமும் உண்டு.
2இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது,
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படுகிறது.
3மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி,
உலோக மூலப்பொருட்களைக் காரிருளிலும்
ஆழமான குழிகளிலும் தேடுகிறான்.
4அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான்,
காலடிகளே படாத,
மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான்.
5உணவு கொடுக்கும் பூமி
அதின் கீழ்ப்பகுதியிலுள்ளவை நெருப்பினால் உருமாறுகிறது.
6அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன,
அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது.
7இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது;
பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை.
8கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை;
சிங்கம் அங்கு திரிவதுமில்லை.
9மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி,
மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான்.
10அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்;
அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன.
11ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து,
மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
12ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே?
விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே?
13மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை;
உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
14“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது;
“அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
15சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது,
அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது.
16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும்
அதற்கு ஈடல்ல.
17பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது,
தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
18பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது;
ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது.
20அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது?
விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
21அது உயிருள்ள அனைவருக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது.
22“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின”
என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
23அதின் வழி இறைவனுக்குத் தெரியும்;
அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார்.
24ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார்,
வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
25அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி,
தண்ணீர்களை அளந்தபோதும்,
26மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும்,
இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
27அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்;
அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார்.
28இறைவன் மனிதனிடம்,
“யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம்,
தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.

Currently Selected:

யோபு 28: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in