YouVersion Logo
Search Icon

எரேமியா 22

22
தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
1யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து. 2தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். 3யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள். 4இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். 5ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார்.
6மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே:
“நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும்,
லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும்,
நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும்,
குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன்.
7நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை
அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன்.
அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி
அவைகளை நெருப்பிலே போடுவார்கள்.
8“அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள். 9அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.”
10இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம்.
அவன் மறைவுக்காக துக்கிக்கவும் வேண்டாம்.
நாடுகடத்தப்பட்ட அரசனுக்காகவே மனங்கசந்து அழுங்கள்.
ஏனெனில் இனிமேல் அவன் திரும்பி வரமாட்டான். தன் சொந்த நாட்டைக் காணவும் மாட்டான்.
11யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான். 12அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார்.
13“அநியாயத்தினால் தன் அரண்மனையையும்,
அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு!
அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக்
கூலிகொடாமல் வேலை வாங்குகிறான்.
14அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன்
எனக்குப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்’ என்கிறான்.
அவ்வாறே அவன் அதற்குப் பெரிய ஜன்னல்களை அமைத்து,
கேதுரு மரப்பலகைகளால் தளவரிசைப்படுத்தி,
அவைகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கிறான்.
15“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால்,
அது உன்னை அரசனாக்குமோ?
உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ?
நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது
அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ?
16அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான்.
அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன.
என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
17“ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும்,
குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்,
கப்பம் கேட்பதிலும் ஒடுக்குவதிலுமே
நோக்கமாயிருக்கின்றன” என்று யெகோவா கூறுகிறார்.
18ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே:
“அவனுக்காக அவர்கள்:
‘ஐயோ என் சகோதரனே! ஐயோ என் சகோதரியே!’ என்று
துக்கங்கொண்டாட மாட்டார்கள்.
‘ஐயோ என் தலைவனே! ஐயோ அவனுடைய மேன்மையே!’
என்றும் அவனுக்காக துக்கங்கொண்டாட மாட்டார்கள்.
19ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள்.
அவனை இழுத்துக்கொண்டுபோய்
எருசலேமின் வாசல்களுக்கு வெளியே எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.
20லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு.
பாசானில் உனது குரல் கேட்கட்டும்.
அபாரீமிலிருந்தும் அழு.
ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள்.
21பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன்.
ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய்.
உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது.
நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
22காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும்.
உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள்.
அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும்
நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய்.
23லெபனோனில் வாழ்பவளே!
கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே!
பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது,
நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய்.
24யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம். 25நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும் 26நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள். 27நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார்.
28கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான
உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ?
அவனும், அவனுடைய பிள்ளைகளும்
அவர்கள் அறியாத ஒரு நாட்டில்
ஏன் வீசி எறியப்பட வேண்டும்.
29ஓ நாடே! நாடே! நாடே!
யெகோவாவின் வார்த்தையைக் கேள்;
30யெகோவா கூறுவது இதுவே:
“தன் வாழ்நாளில் செழித்தோங்காத பிள்ளைகளற்ற
ஒரு மனிதனைப்போல் இவனைக் குறித்து எழுதிவை.
அவனுடைய வழித்தோன்றல்களில் ஒருவனும் செழித்தோங்கமாட்டான்.
தாவீதின் அரியணையில் உட்காரவுமாட்டான்.
இனிமேல் யூதாவில் அரசாளவுமாட்டான் என்கிறார்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in