YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 46

46
எகிப்தில் யாக்கோபு
1இஸ்ரயேல் தன் உடைமைகளுடன் புறப்பட்டுப் பெயெர்செபாவை அடைந்தபோது, அங்கே தன் தகப்பன் ஈசாக்கின் இறைவனுக்குப் பலிகளைச் செலுத்தினான்.
2அன்றிரவே இறைவன் இஸ்ரயேலுடன் தரிசனத்தில் பேசி, “யாக்கோபே! யாக்கோபே!” என்று கூப்பிட்டார்.
அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.
3அப்பொழுது அவர், “நான் இறைவன், நானே உன் தகப்பனின் இறைவன். நீ எகிப்திற்குப் போகப் பயப்படாதே, அங்கே நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன். 4நீ எகிப்திற்குப் போகையில் உன்னுடன்கூட வருவேன், நிச்சயமாக உன்னை மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். யோசேப்பே தன் கையினால் உன் கண்களை மூடுவான்” என்றார்.
5பின்பு யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டான்; இஸ்ரயேலின் மகன்கள் தங்களுடைய தகப்பன் யாக்கோபையும், தங்கள் பிள்ளைகளையும், தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பிய வண்டிகளில் ஏற்றிச் சென்றார்கள். 6அத்துடன் தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடனும், கானானில் சம்பாதித்த எல்லா பொருட்களுடனும், யாக்கோபும் அவன் சந்ததிகளும் எகிப்திற்குப் போனார்கள். 7யாக்கோபு தன்னுடன் தன் சந்ததிகளான மகன்களையும், பேரன்களையும், மகள்களையும், பேத்திகளையும் அழைத்துக்கொண்டு எகிப்திற்குப் போனான்.
8யாக்கோபுடன் எகிப்திற்குப்போன அவனுடைய சந்ததிகளான, இஸ்ரயேலரின் பெயர்களாவன:
யாக்கோபின் முதற்பேறானவன் ரூபன்.
9ரூபனின் மகன்கள்:
ஆனோக், பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
10சிமியோனின் மகன்கள்:
எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல் என்பவர்கள்.
11லேவியின் மகன்கள்:
கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
12யூதாவின் மகன்கள்:
ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். கானான் நாட்டில் ஏர், ஓனான் என்பவர்கள் இறந்துபோனார்கள்.
பேரேஸின் மகன்கள்:
எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
13இசக்காருடைய மகன்கள்:
தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் என்பவர்கள்.
14செபுலோனுடைய மகன்கள்:
செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
15பதான் அராமிலே மகள் தீனாளைத் தவிர யாக்கோபுக்கு லேயாள் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவனுடைய மகன்களும் மகள்களும் எல்லாரும் முப்பத்து மூன்றுபேர்.
16காத்துடைய மகன்கள்:
சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
17ஆசேருடைய மகன்கள்:
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள். இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்.
பெரீயாவின் மகன்கள்:
ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
18லாபான் தன்னுடைய மகள் லேயாளுக்குக் கொடுத்த பெண்ணான, சில்பாள் மூலம் யாக்கோபுக்குக் கிடைத்த பிள்ளைகள் இவர்களே. அவர்கள் எல்லாரும் பதினாறுபேர்.
19யாக்கோபின் மனைவி ராகேலின் மகன்கள்:
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
20எகிப்திலே யோசேப்புக்கு மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள். இவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் யோசேப்புக்குப் பெற்றாள்.
21பென்யமீனின் மகன்கள்:
பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், உப்பீம், ஆர்த் என்பவர்கள்.
22யாக்கோபுக்கு ராகேல் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாமாக பதினாலு பேர்.
23தாணுடைய மகன்:
ஊசிம்.
24நப்தலியின் மகன்கள்:
யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
25லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பெண் பில்காள் யாக்கோபுக்கு பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாரும் ஏழுபேர்.
26யாக்கோபுடன் எகிப்திற்குப்போன மகன்களின் மனைவிகளைத் தவிர, நேரடியான சந்ததிகள் எல்லோரும் அறுபத்தாறு பேர். 27யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் யாக்கோபின் குடும்ப அங்கத்தினர்களும் சேர்த்து எல்லாருமாக எழுபதுபேர்.
28அதன்பின் யாக்கோபு கோசேனுக்குப் போகும் வழியை அறியும்படி, யூதாவைத் தனக்கு முன் யோசேப்பிடம் அனுப்பினான். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு வந்தபோது, 29யோசேப்பு தன் தகப்பன் இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி, கோசேனுக்குப் போனான். யோசேப்பு தன் தகப்பன் முன் போனதுமே தன் தகப்பனைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான்.
30இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால், நீ உயிரோடிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
31பின்பு யோசேப்பு தன் சகோதரரிடமும் தன் தகப்பன் குடும்பத்தாரிடமும், “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டில் வாழ்ந்த என் சகோதரரும் என் தகப்பனின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள். 32அவர்கள் மேய்ப்பர்கள்; அவர்கள் கால்நடைகளை கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் வந்திருக்கிறார்கள்’ என்று சொல்வேன். 33பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது, 34நீங்கள், ‘உமது அடியாராகிய நாங்களும் எங்கள் முற்பிதாக்களைப் போலவே, சிறுவயதுமுதல் மந்தை மேய்ப்பவர்கள்’ என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் கோசேன் நாட்டில் குடியிருக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், எகிப்தியருக்கு மேய்ப்பர்கள் அருவருப்பானவர்கள்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in