YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 45

45
யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல்
1அங்கு நின்ற தன் உதவியாளர்களுக்கு முன்னால் யோசேப்பினால் அதற்குமேல் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவன் அவர்களிடம், “எல்லோரையும் என் முன்னிருந்து போகச்செய்யுங்கள்” என்று சத்தமிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, வேறு ஒருவரும் அவனோடிருக்கவில்லை. 2அவன் மிகச் சத்தமிட்டு அழுததினால் அது வெளியே நின்ற எகிப்தியருக்குக் கேட்டது; பார்வோனின் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
3யோசேப்பு தன் சகோதரரிடம், “நான்தான் யோசேப்பு; என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். ஆனால் அவன் சகோதரர்களால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள்.
4யோசேப்பு தன் சகோதரரிடம், “என் அருகே வாருங்கள்” என்று கூப்பிட்டான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்! 5இப்பொழுது நீங்கள் என்னை விற்றதற்காக கலங்கவும், உங்கள்மேல் கோபங்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காப்பதற்காகவே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாகவே இங்கு அனுப்பினார். 6இரு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது, உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது. 7பூமியில் மிஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களைப் பெரும் மீட்பினால் காப்பாற்றவுமே, இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார்.
8“ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவன் குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் ஏற்படுத்தினார். 9நீங்கள் என் தகப்பனிடம் விரைவாகத் திரும்பிப்போய், உமது மகன் யோசேப்பு சொல்வது இதுவே: ‘இறைவன் என்னை எகிப்து முழுவதற்கும் தலைவனாக்கியிருக்கிறார். தாமதிக்காமல், என்னிடம் வாருங்கள். 10நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உங்களுடைய, ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளோடும் உங்களுக்குரிய எல்லாவற்றோடும் எனக்கு அருகிலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம். 11இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பஞ்சம் நீடிக்கப்போகிறது. நான் உங்களுக்குத் தேவையானவற்றைத் தருவேன். இல்லாவிட்டால், நீங்களும் உங்கள் வீட்டாரும், உங்களுக்குரிய எல்லாரும் ஆதரவு அற்றவர்களாகிவிடுவீர்கள்’ என்கிறான் என்று சொல்லுங்கள்” என்றான்.
12மேலும் யோசேப்பு, “உங்களுடன் பேசுகிறவன் உண்மையாகவே நானே என்பதை, நீங்களும் என் தம்பி பென்யமீனும் காண்கிறீர்கள். 13எகிப்திலே எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா கனத்தையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்குச் சொல்லுங்கள். நீங்கள் விரைவாய் போய் என் தகப்பனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
14பின்பு தன் தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதான், அப்படியே பென்யமீனும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதான். 15பின்பு அவன் தன் சகோதரர் எல்லோரையும் முத்தமிட்டு அழுதான். அதன்பின் அவன் சகோதரரும் அவனுடன் பேசினார்கள்.
16யோசேப்பின் சகோதரர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி பார்வோனின் அரண்மனைக்கு எட்டியபோது, அவனும் அவனுடைய அதிகாரிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 17அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: “நீ உன் சகோதரரிடம், ‘நீங்கள் உங்கள் மிருகங்களில் பொதிகளை ஏற்றிக்கொண்டு கானானுக்குத் திரும்பிப்போங்கள், 18அங்கிருந்து உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பங்களையும் இங்கே என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். நான் எகிப்து நாட்டின் சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பேன்; நீங்கள் நாட்டின் செழிப்பை அனுபவிக்கலாம்.’
19“மேலும், நீ அவர்களுக்கு அறிவுறுத்திச் சொல்லவேண்டியதாவது: ‘எகிப்திலிருந்து சில வண்டிகளைக் கொண்டுபோய் உங்கள் பிள்ளைகளையும், மனைவிகளையும், உங்கள் தகப்பனோடுகூட இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள். 20உங்களுக்குள்ள உடைமைகளைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில், எகிப்தின் சிறந்த பொருட்களெல்லாம் உங்களுடையதாகும்’ என்று சொல்” என்று பார்வோன் சொன்னான்.
21இஸ்ரயேலின் மகன்கள் அவ்வாறே செய்தார்கள். யோசேப்பு பார்வோன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான உணவுகளையும் கொடுத்தான். 22அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல்#45:22 அதாவது, சுமார் 3.5 கிலோகிராம் வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். 23யோசேப்பு தன் தகப்பனுக்கு பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மேல் தானியம், அப்பம் அவருடைய பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். 24அதன்பின் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்யவேண்டாம்!” என்றான்.
25அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். 26அவர்கள் தங்கள் தகப்பனிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கிறான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. 27ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்குச் சொன்னபோதும், யாக்கோபை எகிப்திற்கு அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டபோதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. 28அப்பொழுது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என இப்பொழுது நான் நம்புகிறேன்! நான் சாகிறதற்கு முன் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in