YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 6

6
இஸ்ரயேல் மலைகளுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு
1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாக இறைவாக்கு சொல். 3இஸ்ரயேலின் மலைகளே, ‘ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் கூறுவது இதுவே: இதோ, நான் உங்கள்மேல் வாளை வரப்பண்ணப் போகிறேன். உங்கள் மேடைகளை அழிப்பேன். 4உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்படும். தூப மேடைகள் நொறுக்கப்படும். உன் மக்களை உனது விக்கிரங்களுக்கு முன் கொல்லுவேன். 5இஸ்ரயேலருடையது பிரேதங்களை அவர்களுடைய விக்கிரகங்களுக்கு முன்பாகக் கிடத்தி, உங்கள் எலும்புகளை உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் சிதறப்பண்ணுவேன். 6நீங்கள் வாழும் இடங்களிலுள்ள பட்டணங்கள் எல்லாம் பாழடையும். மேடைகள் அழிக்கப்படும். இவ்விதம் உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு வெறுமையாகும். உங்கள் விக்கிரகங்கள் நொறுக்கப்பட்டு அழிக்கப்படும். உங்கள் தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைவேலைகளும் இல்லாமல் ஒழிக்கப்படும். 7உங்களுடைய மக்கள் கொல்லப்பட்டு உங்கள் நடுவிலேயே விழுவார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
8“ ‘ஆயினும் நீங்கள் தேசங்களுக்குள்ளும் நாடுகளுக்குள்ளும் சிதறடிக்கப்படும்போது, சிலரை வாளுக்குத் தப்பும்படி வைப்பேன். அதனால் சிலர் தப்புவீர்கள். 9அப்பொழுது நாடுகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு போயிருந்தோரில் தப்பியவர்கள் என்னை நினைவுகூருவார்கள். என்னைவிட்டு விலகிப்போன அவர்களுடைய விபசாரம் நிறைந்த இருதயங்களின் நிமித்தமும், விக்கிரகங்களை இச்சித்த அவர்களுடைய கண்களின் நிமித்தமும், நான் எவ்வளவாய் வேதனையடைந்தேன் என்பதை அவர்கள் நினைவுகூருவார்கள். அப்பொழுது தாங்கள் செய்த எல்லா தீமைகளையும் அருவருப்புகளையும் நினைத்து அவர்கள் தங்களையே அருவருப்பார்கள். 10மேலும், நானே யெகோவா என்பதையும் அறிந்துகொள்வார்கள். இந்த அழிவை நான் அவர்கள்மீது கொண்டுவருவேன் என நான் அச்சுறுத்தியது வீண்பேச்சல்ல என்பதையும் அறிந்துகொள்வார்கள்.
11“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: உன் கைகளைத் தட்டி, கால்களால் தரையை உதைத்து, “ஐயோ!” என அலறு. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டார் தாங்கள் செய்த வெறுக்கப்படத்தக்க தீமையான காரியங்களுக்காகவும், கொடுமைகளுக்காகவும், வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் சாவார்கள். 12தொலைவில் இருப்பவன் கொள்ளைநோயினால் மரிப்பான். அருகில் உள்ளவன் வாளினால் மடிவான். தப்பவிடப்படுபவனோ பஞ்சத்தினால் மரணமடைவான். இவ்விதமாய் அவர்கள் மீதுள்ள எனது கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன். 13தங்களது விக்கிரகங்களுக்கெல்லாம் நறுமண தூபங்காட்டிய பலிபீடங்களைச் சுற்றிலும், விக்கிரகங்களின் நடுவிலும், ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு மலை உச்சியிலும், பச்சையான ஒவ்வொரு மரத்தின் கீழும், ஒவ்வொரு கர்வாலி மரத்தின் கீழும் அவர்களில் கொல்லப்பட்டவர்கள் கிடக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 14நான் எனது கையை, அவர்களுக்கு விரோதமாக நீட்டி பாலைவனத்திலிருந்து திப்லாவரை#6:14 சில எபிரெய மொழி பிரதிகளில் திப்லாவரை என்பது ரிப்லாவரை என்றுள்ளது. அவர்கள் வாழும் இடங்களையெல்லாம் பாழாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in