YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 5

5
எருசலேமுக்குத் தண்டனை
1“மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும். 2உன் முற்றுகையின் நாட்கள் முடியும்போது, அதன் மூன்றில் ஒரு பாகத்தை நகருக்குள் போட்டு எரித்துவிடு. மூன்றில் ஒரு பாகத்தை வாள் முனையால் நகரத்தைச் சுற்றிலும் தூவி விடு. மூன்றில் ஒரு பாகத்தைக் காற்றிலே பறக்க விடு. ஏனெனில் நான் உருவின வாளோடு என் மக்களைப் பின்தொடருவேன். 3ஆனால், அதில் சில முடிகளை எடுத்து உன் உடையின் மடிப்பிலே முடிந்து வை. 4மீண்டும் அதில் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் எறிந்து அதை எரித்துவிடு. அந்த அதிலிருந்து நெருப்பு எழும்பி இஸ்ரயேல் வீட்டார் அனைவர்மேலும் தீ பரவும்.
5“ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: நாடுகளின் நடுவே நான் நிலைப்படுத்திய எருசலேம் இதுவே. இது நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. 6ஆனால் அவள் தன் கொடுமையின் நிமித்தம் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள நாடுகளையும், சூழ இருக்கும் நாடுகளையும் பார்க்கிலும் அதிகமாய் அவள் கலகம் செய்தாள். அவள் என் சட்டங்களைத் தள்ளிவிட்டாள்; எனது கட்டளைகளையும் பின்பற்றவில்லை.
7“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிற தேசத்தாரைப் பார்க்கிலும் அடங்காதவர்களாயிருந்தீர்கள். நீங்கள் எனது கட்டளைகளையோ, சட்டங்களையோ பின்பற்றவும் கைக்கொள்ளவும் இல்லை. உங்களைச் சுற்றிலும் இருக்கிற பிறநாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நடந்துகொள்ளவும் இல்லை.
8“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எருசலேமே! நான், நானே உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நாடுகளெல்லாம் காணும்படியாக உன்னைத் தண்டிப்பேன். 9உனது எல்லா வெறுக்கத்தக்க விக்கிரகங்களினிமித்தம் நான் இதுவரை செய்யாததும், இனியொருபோதும் செய்யாதிருப்பதுமான காரியத்தை உனக்குச் செய்வேன். 10அப்பொழுது உன் மத்தியில் தந்தையர் தம் பிள்ளைகளையும், பிள்ளைகள் தம் தந்தையரையும் தின்பார்கள். நான் உன்னைத் தண்டித்து, உன்னில் மீதியாக இருப்போரை எல்லாத் திசையிலும் சிதறப்பண்ணுவேன். 11ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அருவருப்பான உருவச் சிலைகளினாலும், வெறுக்கத்தக்க உன் செயல்களினாலும் என் பரிசுத்த இடத்தை அசுத்தமாக்கினபடியால், நான் என் தயவை உன்னைவிட்டு விலக்குவேன். உன்னை இரக்கத்தோடு பார்க்கவோ, தப்பவிடவோ மாட்டேன் என்பதும் நிச்சயம். 12உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
13“அப்பொழுது என் கோபம் தீர்ந்துவிடும். அவர்களுக்கெதிரான என் கடுங்கோபமும் தணியும். நான் பழிதீர்த்துக்கொள்வேன். என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவாகிய நான் வைராக்கியத்தோடு அதைப் பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
14“மேலும், உன்னைச் சுற்றிலும் வாழும் நாடுகளின் மத்தியில், உன்னைக் கடந்துபோகும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் உன்னைப் பாழும், பழிச்சொல்லுமாக்குவேன். 15நான் கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும், கடுமையான கண்டிப்பினாலும் உனக்குத் தண்டனை வழங்குவேன். அப்பொழுது நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளுக்கு நிந்தையும், பரிகாசமும், எச்சரிப்பும், பயங்கரக் காட்சியுமாய் இருப்பாய். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். 16கொடிய பஞ்சத்தின் அம்புகளால் நான் உன்னைத் தாக்கும்போது, உன்னை அழிப்பதற்காகவே அதை எய்வேன். நான் உன்மேல் அதிகமதிகமாய்ப் பஞ்சத்தைக் கொண்டுவந்து உணவு வழங்குவதையும் நிறுத்துவேன். 17பஞ்சத்தையும் காட்டு விலங்குகளையும் உனக்கு விரோதமாய் அனுப்புவேன். அவைகளினால் நீங்கள் பிள்ளையற்றவர்களாவீர்கள். கொள்ளைநோயும், இரத்தம் சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும். நான் உனக்கு விரோதமாய் வாளையும் வரப்பண்ணுவேன். யெகோவாவாகிய நானே பேசினேன்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in