YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 4

4
எருசலேமுக்கு வரவிருக்கும் அழிவு
1“மனுபுத்திரனே, நீ காய்ந்த செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதன்மேல் எருசலேம் நகரை வரைந்துகொள். 2அதன்பின் அதை முற்றுகையிட்டு, அதற்கு விரோதமாய் முற்றுகைத்தளங்களை அமைத்து, கோட்டை கட்டி, மண்மேடுகளைப் போடு. அதற்கு விரோதமாக முகாம்களை அமைத்து, சுற்றிலும் சுவரை இடிக்கும் இயந்திரங்களை வை. 3பின்னர் இரும்புச்சட்டி ஒன்றை எடுத்து, அதை உனக்கும் நகருக்கும் இடையிலான இரும்புச்சுவராக்கி, அதற்கு நேராக உனது முகத்தைத் திருப்பிக்கொள். அது முற்றுகையிடப்பட்டிருக்கும். நீயே அதை முற்றுகையிடுவாய். இது இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்.
4“மேலும் நீ இடது புறமாய்ப் படுத்து இஸ்ரயேல் குடும்பத்தின் பாவங்களை உன்மீது சுமந்துகொள். அவ்வாறு நீ படுத்திருக்கும் நாட்களின் அளவுக்கு அவர்களுடைய பாவங்களைச் சுமப்பாய். 5அவர்களுடைய பாவங்களின் வருடங்களுக்கு ஏற்ப அதேயளவு நாட்களை நான் உனக்கு நியமித்திருக்கிறேன். ஆகவே, நீ முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரை இஸ்ரயேல் வீட்டாரின் பாவத்தைச் சுமப்பாய்.
6“அது நிறைவேறியபின் மீண்டும் நீ வலப்பக்கமாய்ப் படுத்து, நாற்பது நாட்கள்வரை யூதா வீட்டாரின் பாவத்தைச் சுமக்கவேண்டும். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருடமாக நான் கணக்கிட்டிருக்கிறேன். 7ஆகவே, எருசலேம் முற்றுகையிடப்படுவதைத் தொடர்ந்து காண்பித்து நீ உன் முகத்தைத் திருப்பி, உன் கரங்களை உயர்த்தி அதற்கு விரோதமாக இறைவாக்குச் சொல்லவேண்டும். 8உனது முற்றுகையின் நாட்களை நிறைவேற்றம்வரை, நீ ஒருபுறம் இருந்து மறுபுறம் புரளாதபடிக்குக் கயிறுகளால் உன்னைக் கட்டுவேன்.
9“நீ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமைகோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள். அவைகளைப் பாத்திரம் ஒன்றிலிட்டு உனக்கு அப்பம் சுடுவாய். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்களும் அவைகளைச் சாப்பிடவேண்டும். 10ஒரு நாளைக்கு இருபது சேக்கல்#4:10 அதாவது, சுமார் 8 அவுன்ஸ் அல்லது சுமார் 230 கிராம் ஆகும் உணவை நிறுத்துத் தினமும் குறிக்கப்பட்ட நேரத்தில் அதைச் சாப்பிடு. 11அத்துடன் ஆறில் ஒரு ஹின்#4:11 அதாவது, சுமார் 2/3 காலாண்டு அல்லது சுமார் 0.6 லிட்டர் ஆகும் அளவு தண்ணீரையும் அளந்து குறிக்கப்பட்ட நேரத்தில் குடிக்கவேண்டும். 12ஒவ்வொரு நாளும் உன் உணவை வாற்கோதுமை அப்பத்தைப்போலவே தயார் செய். அதை அவர்கள் காணும்படி மனித கழிவுகளை எரிபொருளாக்கி, அந்த நெருப்பிலேயே அதைச் சுடவேண்டும்.” 13இவ்விதமாகவே, “இஸ்ரயேல் மக்கள் நான் அவர்களைத் துரத்தும் நாடுகளிடையே தமது உணவைத் தீட்டுள்ளதாய் சாப்பிடுவார்கள்” என்று யெகோவா சொன்னார்.
14அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, அப்படியல்ல; நான் என்னை ஒருபோதும் கறைப்படுத்தவில்லை. என் இளவயதுமுதல் இன்றுவரை இயற்கையாய் இறந்ததையோ, காட்டு மிருகங்களால் கொல்லப்பட்டதையோ நான் சாப்பிட்டதே இல்லையே! அசுத்தமான இறைச்சி எதுவுமே என் வாய்க்குள் போனதும் இல்லையே!” என்றேன்.
15அதற்கு அவர், “சரி; அப்படியானால் மனித கழிவுக்கு பதிலாக பசுவின் சாணத்தில் அப்பத்தைச்சுட உனக்கு அனுமதியளிக்கிறேன்” என்றார்.
16மேலும் அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எருசலேமில் வழங்கப்படும் உணவை நிறுத்தப்போகிறேன். மக்கள் அப்பத்தை நிறை பார்த்து ஏக்கத்தோடு சாப்பிடுவார்கள். தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள். 17ஏனெனில் அங்கே உணவும் தண்ணீரும் குறைந்துபோகும். அவர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் கலக்கமடைந்து, தங்கள் பாவத்தினிமித்தம் நலிந்துபோவார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in