YouVersion Logo
Search Icon

எபேசியர் 1

1
1இறைவனுடைய சித்தத்தினாலே, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய், எபேசு பட்டணத்தில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
2நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
3இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார். 4நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, 5இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். 6தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. 7கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. 8அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். 9இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. 10பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார்.
11தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். 12இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார். 13அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். 14இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
15இக்காரணத்தினாலே, கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் வைத்திருந்திருக்கிற விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும் நான் கேள்விப்பட்டதிலிருந்து, 16என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 17நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன். 18உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள். 19விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது. 20இறைவன் இந்த வல்லமையையே, கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலதுபக்கத்தில் உட்காரச்செய்து கிறிஸ்துவில் செயல்படுத்தினார். 21அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். 22இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy