YouVersion Logo
Search Icon

2 யோவான் 1

1
1சபைத்தலைவனாகிய நான்,
இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது, சத்தியத்திற்காக, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கிறார்கள். 2நம்மில் குடிகொண்டிருக்கும் சத்தியத்தின் நிமித்தமாகவே நாங்கள் இவ்விதமாய் அன்பு செலுத்துகிறோம். இந்த சத்தியம் நம்முடன் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்:
3பிதாவாகிய இறைவனாலும் பிதாவின் மகனாகிய இயேசுகிறிஸ்துவினாலும் வரும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், சத்தியத்தை அறிந்து, அன்பில் நடக்கும் நம்முடன் இருப்பதாக.
4பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்திய வழியில் நடப்பதைக் குறித்து அறிந்தபோது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 5இப்பொழுதும் அன்பான அம்மையாரே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. நாம் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட அதே கட்டளையையே எழுதுகிறேன். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன். 6நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பு. நீங்கள் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறபடி, நாம் அன்பிலே நடக்கவேண்டும் என்பதே அவருடைய கட்டளை.
7ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள். 8ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். 9கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான். 10உங்களிடம் வருகிற யாராகிலும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ வேண்டாம். 11ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள்.
12உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. நான் உங்களைச் சந்தித்து, நேரடியாகவே அவற்றைக்குறித்துப் பேச விரும்புகிறேன். அப்பொழுதே நமது சந்தோஷம் முழுநிறைவுபெறும்.
13தெரிந்துகொள்ளப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும் தங்களுடைய வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.

Currently Selected:

2 யோவான் 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in