YouVersion Logo
Search Icon

லூக் 13

13
அத்தியாயம் 13
மனந்திரும்புங்கள்
1அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். 2இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 3அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள். 4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 5அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார். 6அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. 7அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். 8அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன், 9கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
ஓய்வுநாளில் சுகமாக்கப்பட்டப் பெண்
10ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். 11அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். 12இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, 13அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். 14இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். 15கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 16இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். 17அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
கடுகுவிதை, புளித்த மாவு
18அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? 19அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். 20மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
இடுக்கமான வாசல்
22அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார். 23அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: 24இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். 26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். 27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 29கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். 30அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
எருசலேமுக்காகப் புலம்புதல்
31அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள். 32அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன். 33இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். 34எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது. 35இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Currently Selected:

லூக் 13: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in