YouVersion Logo
Search Icon

லூக் 12

12
அத்தியாயம் 12
எச்சரிக்கையும் உற்சாகப்படுத்துதலும்
1அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. 3ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும். 4என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள். 5நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 6இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை. 7உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். 8அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார். 9மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். 10எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. 11அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள். 12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
அறிவற்ற செல்வந்தனின் உவமை
13அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 14அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். 15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். 16அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. 17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; 18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, 19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். 20தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். 21தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
கவலைப்படாமலிருங்கள்
22பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது. 24காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். 25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். 26மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? 27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 29ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். 30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார். 31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். 32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார். 33உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை. 34உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
விழித்திருங்கள்
35 உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும், 36தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள். 37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 38அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள். 39திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். 40அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார். 41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். 42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்? 43எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். 44தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால், 46அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான். 47தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். 48அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
சமாதானமல்ல பிரிவினையே
49 பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன். 50ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். 51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 53தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
காலங்களை நிதானித்தல்
54பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும். 55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும். 56மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன? 57நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன? 58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான். 59நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Currently Selected:

லூக் 12: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy