YouVersion Logo
Search Icon

லூக் 11

11
அத்தியாயம் 11
ஜெபத்தைக்குறித்து இயேசுவின் போதனை
1அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 2அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:
பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக;
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;
4 எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்;
நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.
5பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, 6என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 7வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். 8பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 10ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 11உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? 12அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
இயேசுவும் பெயெல்செபூலும்
14பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். 15அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 16வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். 17அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் அழிந்துபோகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தக் குடும்பமும் நிலைத்திருக்காது. 18சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. 19நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். 20நான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. 21ஆயுதம் அணிந்த பலசாலி தன் அரண்மனையை காவல்காக்கும்போது, அவனுடைய பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும். 22அவனைவிட பலசாலி வந்து, அவனைத் தோற்கடித்து, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய பொருட்களை கொள்ளையிடுவான். 23என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான். 24அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் போகும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாற இடம் தேடியும் கிடைக்காமல்: நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, 25திரும்பிவரும்போது, அது சுத்தப்படுத்தி ஜோடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, 26திரும்பிப்போய், தன்னைவிட பொல்லாத மற்ற ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உள்ளே புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனிதனுடைய முன் நிலைமையை விட அவனுடைய பின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார். 27இயேசு இவைகளைச் சொல்லும்பொழுது, மக்கள் கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகள் என்று சத்தமிட்டுச் சொன்னாள். 28அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
யோனாவின் அடையாளம்
29மக்கள் கூட்டமாக கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்த வம்சத்தார் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்தவிர வேறு எந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 30யோனா நினிவே பட்டணத்தார்களுக்கு அடையாளமாக இருந்ததுபோல, மனிதகுமாரனும் இந்த வம்சத்திற்கு அடையாளமாக இருப்பார். 31தெற்கு தேசத்து ராணி சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லையிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
சரீரத்தின் விளக்கு
33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். 34கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும். 35எனவே உனக்குள் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாக இரு. 36உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார்.
பரிசேயர்கள் மற்றும் வேதபண்டிதர்களுக்கு எச்சரிக்கை
37இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார். 38அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான். 39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. 40மதிகெட்டவர்களே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உள்புறத்தையும் உண்டாக்கவில்லையா? 41உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குள் எல்லாம் சுத்தமாக இருக்கும். 42பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும். 43பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைகளில் வணக்கங்களையும் விரும்புகிறீர்கள். 44வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது. 45அப்பொழுது நியாயப்பண்டிதர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் அவமதிக்கிறீர் என்றான். 46அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். 47உங்களுக்கு ஐயோ, உங்களுடைய முற்பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 48ஆகவே, உங்களுடைய முற்பிதாக்களுடைய செயல்களுக்கு நீங்களும் உடன்பட்டவர்கள் என்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்களுடைய முற்பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 49ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; 50ஆபேலின் இரத்தத்திலிருந்து பலிபீடத்திற்கும் தேவ ஆலயத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றத்திலிருந்து சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்த வம்சத்தாரிடம் கேட்கப்படுவதற்காக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51நிச்சயமாகவே இந்த வம்சத்தாரிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். 53இவைகளை இயேசு அவர்களுக்குச் சொல்லும்போது, வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டுவதற்காக, அவர் வார்த்தைகளில் ஏதாவது பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிசெய்து அவரை மிகவும் நெருக்கவும், 54அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள்.

Currently Selected:

லூக் 11: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy