சங்கீதம் 22

22
22 சங்கீதம்
(அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
3இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
4எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
6நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி.
8 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
11என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது.
13பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
14தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
15என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத் தூளிலே போடுகிறீர்.
16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
17என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
18என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக் கொள்ளும்.
20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டா மிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
22உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.
24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
25மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
29பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

Kleurmerk

Deel

Kopieer

None

Wil jy jou kleurmerke oor al jou toestelle gestoor hê? Teken in of teken aan