மத்தேயு 28

28
இயேசு உயிர்த்தெழுதல்
1சபத் ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்ப்பதற்குப் போனார்கள்.
2அப்போது திடீரென பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லை புரட்டித் தள்ளி, அதன்மீது உட்கார்ந்திருந்தான். இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது 3அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடை உறை பனியைப் போல் வெண்மையாய் இருந்தது. 4காவல் செய்தவர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கி, உயிரிழந்த மனிதரைப் போலானார்கள்.
5அப்போது கர்த்தரின் தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 6அவர் தாம் சொன்னது போலவே, உயிருடன் எழுந்துவிட்டார், அவர் இங்கே இல்லை; அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். 7“நீங்கள் விரைவாகப் போய், ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகின்றார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்’ என்று அவருடைய சீடர்களிடம் சொல்லுங்கள். இதோ நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன்” என்றும் சொன்னான்.
8எனவே, அந்தப் பெண்கள் கல்லறையைவிட்டு விரைவாக வெளியேறி, பயமடைந்தவர்களாகவும் மனமகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் நடந்ததை சீடர்களிடம் சொல்வதற்கு ஓடினார்கள். 9ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடம் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்து, அவரை வழிபட்டார்கள். 10இயேசு அவர்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
காவலாளரின் அறிக்கை
11அந்தப் பெண்கள் வழியில் போய்க் கொண்டிருக்கையில், அந்தக் காவலாளர்களில் சிலர் பட்டணத்திற்குள் போய் தலைமை மதகுருக்களிடம் நடந்த யாவற்றையும் அறிவித்தார்கள். 12தலைமை மதகுருக்கள் சமூகத் தலைவர்களைச் சந்தித்து, திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்த இராணுவ வீரருக்கு ஒரு பெருந் தொகைப் பணத்தைக் கொடுத்து, 13“நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்று விட்டார்கள்’ என்று சொல்லுங்கள். 14இந்தச் செய்தி ஆளுநரின் காதுகளுக்கு எட்டினால், நாங்கள் அவரைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சினை ஏற்படாதபடி பார்த்துக்கொள்வோம்” என்றார்கள். 15எனவே இராணுவ வீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதையே சொன்னார்கள். இந்தக் கதை இந்த நாள்வரை யூதர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்டிருக்கிறது.
மாபெரும் கட்டளை
16அப்போது பதினொரு சீடர்களும் அவர்களைப் போகும்படி, இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த கலிலேயாவிலிருந்த மலைக்கு போனார்கள். 17அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவரை வழிபட்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18பின்பு இயேசு அவர்களிடம் வந்து, “வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 19எனவே நீங்கள் புறப்பட்டுப் போய் அனைத்து இன மக்களையும்#28:19 இன மக்களையும் – எல்லா தேசத்தின் மக்களையும் என்றும் மொழிபெயர்க்கலாம் சீடராக்கி, பிதாவினதும் மகனினதும், பரிசுத்த ஆவியானவரினதும் பெயரில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, 20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இதோ! நான் நிச்சயமாகவே எப்போதும் உங்களுடனே இருக்கின்றேன், இந்த யுகத்தின் முடிவு வரையும்கூட இருக்கின்றேன்” என்றார்.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın

மத்தேயு 28 için video