லூக்கா 24

24
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1பின்பு, வாரத்தின் முதலாம் நாள்#24:1 முதலாம் நாள் – இது ஓய்வுநாளுக்கு அடுத்த நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிப் போனார்கள். 2அங்கே கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல், புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே போனபோது, ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. 4அவர்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, மின்னலைப் போல் மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டு பேர் அவர்களின் அருகே நின்றார்கள். 5அந்தப் பெண்களோ பயந்து போய், முகத்தைத் தரையில் பதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருப்பவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்? 6அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: 7‘மனுமகன் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டும்; பின்னர், மூன்றாம் நாளிலே திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள். 8அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களின் ஞாபகத்திற்கு வந்தன.
9அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பி வந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொருவரிடமும்,#24:9 பதினொருவரிடமும் என்பது பதினொரு அப்போஸ்தலர்களிடம் மற்றவர்களிடமும் சொன்னார்கள். 10மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்றப் பெண்களும் அப்போஸ்தலர்களுக்கு இதைச் சொன்னார்கள். 11ஆனால் அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. ஏனெனில் இவர்கள் சொன்னது அவர்களுக்கு வெறும் பிதற்றலாகத் தோன்றியது. 12ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் குனிந்து உள்ளே பார்த்தபோது, அங்கே, அவரைச் சுற்றியிருந்த விலையுயர்ந்த மெல்லிய துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டு, என்ன நடந்ததோ என்று வியப்புடன் தனக்குள்ளே யோசித்துக்கொண்டு திரும்பிச் சென்றான்.
எம்மாவூ கிராமத்தின் வழியில் இயேசு
13இதே நாளிலே, சீடர்களில் இரண்டு பேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து பதினொரு கிலோ மீட்டர்#24:13 பதினொரு கிலோ மீட்டர் என்பது ஏழு மைல் தூரத்தில் இருந்தது. 14அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்துப் பேசிக் கொண்டே போனார்கள். 15இப்படியாக, அவர்கள் இந்தக் காரியங்கள் குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடவே போனார்; 16ஆனால், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
17அவர் அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டு போகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன், அசைவற்று நின்றார்கள். 18அவர்களில் ஒருவனான கிலியோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் எருசலேமுக்கு வந்தவர்களில், கடந்த சில நாட்களாக அங்கு நடந்த காரியங்களைப் பற்றி அறியாத ஒரே ஒருவர் நீர்தானோ?” என்று கேட்டான்.
19அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவருக்குப் பதிலாக:
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக் குறித்தே சொல்கின்றோம்; அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள ஒரு இறைவாக்கினராக இருந்தார். 20தலைமை மதகுருக்களும் எங்கள் ஆளுநர்களும் அவருக்கு மரணதண்டனை கொடுக்கும்படி கையளித்து,#24:20 கையளித்து – ரோம ஆளுநரான பிலாத்துவிடம் கையளித்தனர். அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; 21ஆனால் நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகின்றவர் அவரே என்ற நம்பிக்கையோடு இருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. 22அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குப் போனார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்தார்கள். 23அங்கே அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், தாங்கள் இறைதூதர்களைக் கண்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாக அந்த இறைதூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். 24அப்போது எங்களோடு இருந்தவர்களுள் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே இருப்பதைக் கண்டார்கள். ஆனால் இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
25அப்போது இயேசு அவர்களிடம், “அறிவற்றவர்களே, இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்க முடியாதபடி, சிந்தனை குன்றியவர்களே! 26மேசியா தமது மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, அவர் இந்த வேதனைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருந்ததே?” என்றார். 27பின்பு, மோசேயின் புத்தகங்கள் முதல், எல்லா இறைவாக்கினர்களின் புத்தகங்கள் வரை, வேதவசனங்கள் எல்லாவற்றிலும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்தவைகளை அவர் அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார்.
28அவர்கள், தாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தொடர்ந்து அதற்கு அப்பால் போகின்றவர் போல தம்மைக் காட்டிக் கொண்டார். 29அப்போது அவர்கள், “நீர் எங்களுடன் தங்கும். பொழுது சாயப் போகின்றது; நேரமும் கடந்துவிட்டது” என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். எனவே அவர் அவர்களுடன் தங்குவதற்காக உள்ளே சென்றார்.
30இயேசு அவர்களோடு உணவுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்திய பின், அதைத் துண்டுகளாக்கி அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். 31அப்போது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போனார். 32அப்போது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கிக் காட்டியபோதும் நம்முடைய உள்ளங்கள் நமக்குள்ளே சுடர்விட்டு பிரகாசித்தன அல்லவா?” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.
33அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள். 34அவர்கள் எல்லோரும், “ஆண்டவர் உண்மையாகவே உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்கும் காட்சியளித்துள்ளார்!” என்று சொல்லிக் கொண்டார்கள். 35அப்போது இந்த இருவரும் வழியிலே தங்களுக்கு நடந்ததையும், இயேசு அப்பத்தைத் துண்டுகளாக்கி பங்கிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படியாக அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்
36அவர்கள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம்” என்று சொன்னார்.
37அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்து போனவரின் ஆவியைக் காண்பதாக நினைத்துக் கொண்டார்கள். 38அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழுகிறது? 39என்னுடைய கைகளையும் கால்களையும் பாருங்கள். இது நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கின்ற எனக்கு சதையும் எலும்புகளும் இருக்கின்றன, ஆனால் ஒரு ஆவிக்கு அப்படி இருக்காதே” என்றார்.
40இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41அவர்களோ மனமகிழ்ச்சியாலும், வியப்பாலும் நிறைந்திருந்ததால், அவர்களால் அதை இன்னும் நம்ப முடியவில்லை. அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கின்றதா?” என்று கேட்டார். 42அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை#24:42 மீன் துண்டை – சில பிரதிகளில் தேன் அல்லது தேன் கூட்டுத் துண்டையும் மீனுடன் கொடுத்தார்கள் என்றுள்ளது. அவருக்குக் கொடுத்தார்கள். 43அவர் அதை எடுத்து, அவர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார்.
44“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்குச் சொன்னது இதுதான்: மோசேயினுடைய நீதிச்சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருப்பவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
45பின்பு, வேதவசனங்களை அவர்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார். 46இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: மேசியா வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். 47பாவமன்னிப்பைப் பெறுவதற்கான மனந்திரும்புதல் குறித்து, எருசலேம் தொடங்கி எல்லா இனங்களுக்கும் அவருடைய பெயரில் அறிவிக்க வேண்டும். 48இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கின்றீர்கள். 49என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் அணிவிக்கப்பட்டு#24:49 அணிவிக்கப்பட்டு – இதற்கு நிரப்பப்பட்டு என்றும் பொருள்கொள்ளலாம். வலிமை பெறும் வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குச் செல்லுதல்
50இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். 51இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். 52அப்போது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மனமகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 53அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın