யோவான் 6

6
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்
1இவை நடந்த பின்னர், இயேசு திபேரியா கடல் என அழைக்கப்பட்ட கலிலேயா கடலின் மறுகரைக்குச் சென்றார். 2அவர் நோயாளிகளுக்கு செய்த அற்புத அடையாளங்களை கண்டிருந்ததனால், பெருங்கூட்டமாக மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். 3அங்கே இயேசு ஒரு மலைச்சரிவில் ஏறிப் போய், தமது சீடர்களுடன் உட்கார்ந்தார். 4அப்போது யூதருடைய பஸ்கா பண்டிகை சமீபித்திருந்தது.
5இயேசு ஏறெடுத்துப் பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டு, “இந்த மக்கள் சாப்பிடுவதற்கான உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று பிலிப்புவிடம் கேட்டார். 6ஏனெனில், தாம் செய்யப் போவதை அவர் ஏற்கெனவே தெரிந்திருந்தும், அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே அப்படிக் கேட்டார்.
7பிலிப்பு அவருக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் சிறிதளவு கொடுப்பதாக இருந்தாலும், இருநூறு தினாரி#6:7 இருநூறு தினாரி – இதன் பெறுமதி ஒருவருடைய ஆறு மாதச் சம்பளம் பணத்துக்கு உணவு வாங்கினாலும் போதாதே” என்றான்.
8அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம், 9“இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் அது இவ்வளவு பெருங்கூட்ட மக்களுக்குப் போதுமானதா?” என்றான்.
10அதற்கு இயேசு, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். எனவே மக்கள் புற்கள் நிறைந்த தரையில் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தார்கள். 11அப்போது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்திய பின், அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு தேவையான அளவு பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார்.
12அவர்கள் எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டு முடிந்ததும், அவர் சீடர்களிடம், “மீதியான அப்பத் துண்டுகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஒன்றையும் வீணாக்கக் கூடாது” என்றார். 13அப்படியே அந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களின் துண்டுகளிலிருந்து மக்கள் சாப்பிட்டதன் பின், மீதியானவற்றைச் சீடர்கள் சேர்த்தெடுத்து பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
14அவர் செய்த அந்த அற்புத அடையாளத்தை மக்கள் கண்டபோது, “நிச்சயமாக, இவரே உலகத்திற்கு வரவேண்டியிருந்த இறைவாக்கினர்” என்று சொல்லத் தொடங்கினார்கள். 15அவர்கள் தம்மைப் பலவந்தமாய் தங்களுடைய அரசனாக்க எண்ணியிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, அவர்களைவிட்டு விலகி, திரும்பவும் தனியாக ஒரு மலைக்குச் சென்றார்.
இயேசு தண்ணீரின் மேல் நடத்தல்
16மாலையானபோது, அவருடைய சீடர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து இறங்கி கடற்கரைக்குச் சென்றார்கள். 17அதற்குள் இருட்டிவிட்டது, ஆனால் இயேசுவோ அவர்களுடன் வந்து சேரவில்லை. எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து கப்பர்நகூமை நோக்கிப் போனார்கள். 18அப்போது கடும் காற்று வீசி, கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 19அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை, துடுப்பு வலித்துச் சென்று கொண்டிருந்தபோது, இயேசு கடலின் மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக் கண்டு பயந்தார்கள். 20அவர் அவர்களிடம், “நான்தான்; பயப்பட வேண்டாம்” என்றார். 21அப்போது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள், உடனே படகு அவர்கள் போய்ச் சேரவேண்டிய கரையை அடைந்தது.
22கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள் கூட்டத்தினர், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்பதையும் இயேசு தமது சீடர்களுடன் அதிலே ஏறவில்லை என்பதையும், சீடர்கள் மட்டுமே அதில் போனார்கள் என்பதையும் மறுநாள் தெரிந்து கொண்டார்கள். 23பின்பு திபேரியாவிலிருந்து சில படகுகள், ஆண்டவர் நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த அப்பத்தை மக்கள் சாப்பிட்ட அந்த இடத்தின் அருகே வந்து சேர்ந்தன. 24எனவே அங்கு ஒன்றுகூடி வந்த மக்கள், இயேசுவோ அவருடைய சீடரோ, அங்கு இல்லையென்று கண்டு, இயேசுவைத் தேடிக்கொண்டு, அப்படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குப் போனார்கள்.
இயேசுவே வாழ்வளிக்கும் உணவு
25கடலின் மறுகரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே! எப்போது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள்.
26அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் அற்புத அடையாளங்களைக் கண்டதனால் அல்ல, இங்கே திருப்தியாய்ச் சாப்பிட்டதனாலேயே என்னைத் தேடுகிறீர்கள். 27அழிந்து போகும் உணவுக்காக வேலை செய்ய வேண்டாம். நித்திய வாழ்வு வரை நிலைத்து நிற்கும் உணவுக்காகவே வேலை செய்யுங்கள். அந்த உணவை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார். பிதாவாகிய இறைவன், அவர்மீது தமது அடையாள முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார்.
28அப்போது அவர்கள் அவரிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் எவற்றைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
29இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கும் ஒரே செயல் என்னவெனில், இறைவன் அனுப்பியவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதே” என்றார்.
30அப்போது அவர்கள் அவரிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைக் கொடுப்பீர்? எதைச் செய்வீர்? 31எங்கள் முற்பிதாக்கள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு மோசே#6:31 மோசே – கிரேக்க மொழியில் அவர் கொடுத்தார் என்றுள்ளது. பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’#6:31 யாத். 16:4; நெகே. 9:15; சங். 78:24,25 என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள்.
32அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல. என் பிதாவே பரலோகத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவைக் கொடுக்கின்றார். 33ஏனெனில் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து உலகத்துக்கு வாழ்வைக் கொடுக்கின்றவரே, இறைவன் தரும் உணவு” என்றார்.
34அப்போது அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இந்த உணவை எப்போதும் எங்களுக்குத் தாருங்கள்” என்றார்கள்.
35அப்போது இயேசு அவர்களிடம், “நானே வாழ்வளிக்கும் உணவு. என்னிடம் வருகின்றவன் ஒருபோதும் பசியுடன் போக மாட்டான். என்னில் விசுவாசமாயிருக்கின்றவன் ஒருபோதும் தாகமடைய மாட்டான். 36ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைக் கண்டும், இன்னும் என்னை விசுவாசிக்காதவர்களாகவே இருக்கின்றீர்கள். 37பிதா எனக்குத் தருகின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகின்ற எவரையும் நான் நிராகரிப்பது இல்லை. 38ஏனெனில், நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன். 39அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் ஒருவரையேனும் நான் இழந்துவிடாமல், கடைசி நாளிலே அவர்களை எழுப்ப வேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. 40மகனை கண்டுணர்ந்து மகனில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனும், நித்திய வாழ்வைப் பெறவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்” என்றார்.
41“நானே பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உணவு” என்று அவர் சொன்னதால், யூதர்கள் அவரைக் குறித்து முணுமுணுக்கத் தொடங்கினார்கள். 42அவர்கள் அவரைக் குறித்து, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்போது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
43இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். 44என்னை அனுப்பிய பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், ஒருவனும் என்னிடம் வர மாட்டான். என்னிடம் வருகின்றவனையோ, நான் கடைசி நாளில் எழுப்புவேன். 45‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’#6:45 ஏசா. 54:13 என்று, இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதா சொல்வதைக் கேட்டு, அவரிடம் கற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவனும் என்னிடம் வருகின்றான். 46இறைவனிடமிருந்து வந்தவரைத் தவிர, வேறு எவரும் பிதாவைக் கண்டதில்லை; அவர் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறார். 47நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், விசுவாசிக்கின்றவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. 48நானே வாழ்வளிக்கும் உணவு. 49உங்கள் முற்பிதாக்கள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை உண்டார்கள்; ஆயினும் அவர்கள் இறந்து போனார்களே. 50ஆனால் இதோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உணவு. இதை உண்பவன் மரணிப்பதில்லை. 51நானே பரலோகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவு. எவனாவது இந்த உணவை உண்டால், அவன் என்றென்றும் வாழ்வான். உலகத்தாரின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் உணவு எனது உடலே” என்றார்.
52அப்போது யூதர், “இவன் எப்படி தன் உடலை எங்களுக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள்.
53இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். நீங்கள் மனுமகனின் உடலைச் சாப்பிட்டு, அவருடைய இரத்தத்தைக் குடிக்காவிட்டால், உங்களுக்குள்ளே வாழ்வு இருக்காது. 54எனது உடலைச் சாப்பிட்டு, எனது இரத்தத்தைக் குடிக்கிற எவனுக்கும், நித்திய வாழ்வு உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். 55ஏனெனில் எனது உடலே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56எனது உடலை உண்டு, எனது இரத்தத்தைக் குடிக்கின்றவன் எவனோ, அவன் என்னோடு இணைந்திருக்கின்றான். நானும் அவனோடு இணைந்திருக்கின்றேன். 57உயிரோடிருக்கிறவராகிய பிதா என்னை அனுப்பினார், எனவே நான் உயிர் வாழ பிதாவே காரணம்; அதுபோல, என்னை உண்பவன் என்னாலே வாழ்வு பெறுவான். 58இதுவே பரலோகத்திலிருந்து வந்த உணவு. உங்கள் முற்பிதாக்கள் மன்னாவை உண்டும் இறந்து போனார்கள். ஆனால் இந்த உணவை உண்ணுகிறவனோ, என்றென்றும் வாழ்வான்” என்றார். 59அவர் கப்பர்நகூமிலே ஜெபஆலயத்தில் போதித்தபோது இவைகளைச் சொன்னார்.
சீடர்களில் பலர் இயேசுவை விட்டுவிடுதல்
60இதைக் கேட்ட அவருடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடினமான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள்.
61தமது சீடர்கள் இதைக் குறித்து முணுமுணுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்களுக்குத் தடையாக#6:61 தடையாக – நம்பி ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளதா? என்பதே இதன் அர்த்தம் இருக்கின்றதா? 62மனுமகன், தான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது எப்படியிருக்கும்! 63ஆவியானவரே வாழ்வைக் கொடுக்கின்றார்; உடலோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் வாழ்வையும் கொண்டுள்ளன. 64ஆயினும் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கின்றீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார். 65தொடர்ந்தும் அவர், “பிதா ஒருவனை அனுமதிக்காவிட்டால், ஒருவனாலும் என்னிடம் வர முடியாது என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.
66அதுமுதல், அவருடைய சீடர்களில் பலர் அவரைப் பின்பற்றாமல் அவரைவிட்டுத் திரும்பிப் போனார்கள்.
67அப்போது இயேசு பன்னிரண்டு பேரையும் நோக்கி, “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
68சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய வாழ்வின் வார்த்தைகள் உம்மிடம் அல்லவோ உள்ளன. 69நீரே இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கின்றோம்” என்றான்.
70அப்போது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிவு செய்யவில்லையா? ஆயினும் உங்களில் ஒருவன் பிசாசாய் இருக்கின்றான்!” என்றார். 71அவர் சீமோன் ஸ்காரியோத்தின் மகனான யூதாஸைக் குறித்தே இவ்விதம் சொன்னார். அவன் பன்னிரண்டு பேரில் ஒருவனாயிருந்தும், அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனாய் இருந்தான்.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın