யோவான் 20

20
வெறுமையான கல்லறை
1வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குச் சென்றாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள். 2எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடனிடமும் ஓடி வந்து, “கல்லறையிலிருந்து ஆண்டவரின் உடலை அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
3எனவே பேதுருவும் மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். 4அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடியபோதிலும் மற்றச் சீடன் பேதுருவை முந்திக்கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான். 5அவன் குனிந்து பார்த்தபோது விலையுயர்ந்த மெல்லிய துணிகள்#20:5 விலையுயர்ந்த மெல்லிய துணிகள் யோவா. 19:40 வசனத்தில் சொல்லப்பட்டதான, இயேசுவின் உடலைச் சுற்றிக் கட்டிய அந்த விலையுயர்ந்த மெல்லிய துணிகளே இவை. அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை. 6பின்பு அவனுக்குப் பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, அங்கு வந்துசேர்ந்ததும் கல்லறைக்கு உள்ளே சென்றான். அங்கே விலையுயர்ந்த மெல்லிய துணிகள் கிடப்பதை அவன் கண்டான்; 7ஆனால் இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியோ விலையுயர்ந்த மெல்லிய துணிகளோடு அல்லாமல், தனியாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. 8அதன்பின்பு, முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே சென்றான். அவனும் கண்டு விசுவாசித்தான். 9ஆனால் இயேசு இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 10பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
மரியாளுக்குக் காட்சியளித்தல்
11ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். 12அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைதூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
13அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவளோ, “அவர்கள் என் ஆண்டவரை எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். 14இதைச் சொல்லிவிட்டு அவள் திரும்பியபோது, இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.
15அப்போது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டுபோயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்றாள்.
16அப்போது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார்.
அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரேய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
17அப்போது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிப் பிடிக்காதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகின்றேன்’ என்று அவர்களிடம் சொல்” என்றார்.
18மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் ஆண்டவரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள்; ஆண்டவர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவள் அவர்களுக்குச் சொன்னாள்.
இயேசு தமது சீடருக்குக் காட்சியளித்தல்
19வாரத்தின் முதலாவது நாளாகிய அன்று, மாலை வேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததனால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம்!” என்றார். 20அவர் இதைச் சொன்ன பின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் ஆண்டவரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
21மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22இதைச் சொல்லி, அவர் அவர்கள்மீது ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள். 23நீங்கள் எவருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
தோமாவுக்குக் காட்சியளித்தல்
24இயேசு அங்கே வந்தபோது பன்னிருவரில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா, சீடர்களுடன் இருக்கவில்லை. 25எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்!” என்றார்கள்.
ஆனால் அவனோ அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணி அடிக்கப்பட்ட காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்க மாட்டேன்” என்றான்.
26இது நடந்து எட்டு நாட்களுக்குப் பின், இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும், இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்!” என்றார். 27பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப் பார். சந்தேகப்படுவதைவிட்டு, விசுவாசமுள்ளவனாயிரு” என்றார்.
28அப்போது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
29அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதனால், விசுவாசிக்கின்றாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
யோவான் நற்செய்தியின் நோக்கம்
30இயேசு தமது சீடரின் முன்னிலையில் பல அற்புத அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. 31ஆனால் இயேசுவே மேசியா என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியுமே இவை எழுதப்பட்டிருக்கின்றன.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın