Logo ng YouVersion
Hanapin ang Icon

யோவான் 13

13
இயேசு சீடர்களின் கால்களைக் கழுவுதல்
1பஸ்கா பண்டிகை தொடங்க இருந்தபோது, இயேசு தாம் இந்த உலகத்தைவிட்டுப் புறப்பட்டு, பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கிவிட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களை அன்பு செய்த அவர், கடைசி வரை அவர்களை அன்பு செய்தார்.
2இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் உள்ளத்தை சாத்தான் ஏற்கெனவே ஏவிவிட்டிருந்தான். 3பிதா எல்லாவற்றையும் தனது வல்லமையின் கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகின்றதையும் இயேசு அறிந்திருந்தார். 4எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து, தமது மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துணியைக் கட்டிக் கொண்டார். 5அதன்பின், அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவி, தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்த துணியினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.
6அவர் சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப் போகின்றீரா?” என்றான்.
7இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது எதுவென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ அதைப் புரிந்துகொள்வாய்” என்றார்.
8அப்போது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார்.
9அப்போது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மட்டுமல்லாது, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையும்கூட கழுவும்!” என்றான்.
10அதற்கு இயேசுவோ, “குளித்தவன், தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாய் இருக்கின்றான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆயினும் எல்லோரும் அல்ல” என்றார். 11ஏனெனில் தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
12அவர் அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்த பின், தம்முடைய உடையை அணிந்துகொண்டு, திரும்பவும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். பின்பு அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு புரிகிறதா?” என்று கேட்டார். 13மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கின்றீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான். 14ஆண்டவரும் போதகருமாயிருக்கின்ற நானே உங்கள் கால்களைக் கழுவியபடியால் நீங்களும் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவ வேண்டும். 15ஏனெனில் நான் உங்களுக்குச் செய்தது போலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டுமென்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன். 16நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எந்த வேலையாளும் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. எந்தத் தூதுவனும் தன்னை அனுப்பியவனை விடப் பெரியவன் அல்ல. 17நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார்.
காட்டிக் கொடுக்கப்படுவதை இயேசு முன்னறிவித்தல்
18இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிவு செய்தேன் என்று எனக்குத் தெரியும். ஆயினும் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கின்றான்’#13:18 சங். 41:9 என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.
19“அது நிகழும் முன்பதாகவே, இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கின்றேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள். 20நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நான் அனுப்புகின்ற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.
21இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர் ஆவியில் கலங்கியவராய், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றான்” என்று வெளிப்படையாகச் சொன்னார்.
22அவருடைய சீடர்களோ, அவர் யாரைக் குறித்துச் சொல்கின்றார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள். 23இயேசுவின் சீடர்களில் அவருக்கு அன்பானவனாக இருந்த ஒருவன், உணவுப் பந்தியிலே அவரின் மார்புப் பக்கமாய் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். 24சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக் குறித்துப் பேசுகின்றார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.
25எனவே அவன் இயேசுவின் பக்கமாய் சாய்ந்து, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான்.
26அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கின்றேனோ, அவன் தான்” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 27யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிக் கொண்ட உடனே, சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான்.
இயேசு அவனிடம், “நீ செய்யப் போகின்றதை விரைவாய்ச் செய்” என்றார். 28ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னாரென்று உணவுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. 29யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கின்றார் என்று சிலர் நினைத்தார்கள். 30அப்பத்தை வாங்கிக் கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுச் சென்றான். அப்போது அது இரவு நேரமாயிருந்தது.
புதிய கட்டளை
31யூதாஸ் போன பின்பு இயேசு அவர்களிடம், “இப்போது மனுமகன் மகிமைப்படுகிறார்; இறைவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32இறைவன் அவரில் மகிமைப்பட்டால், இறைவனும் மனுமகனைத் தம்மிலே மகிமைப்படுத்துவார்; அவர் உடனே அவரை மகிமைப்படுத்துவார்.
33“பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆயினும் நான் போகின்ற இடத்துக்கு உங்களால் வர முடியாது; இதை நான் யூதர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கின்றேன்.
34“நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கின்றேன்: ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும். 35நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
36அப்போது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர்?” என்று கேட்டான்.
இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகின்ற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இப்போது முடியாது. ஆனால் பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.
37அப்போது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வர முடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.
38அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், காலையில் சேவல் கூவுகிறதற்கு முன்னதாக நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.

Kasalukuyang Napili:

யோவான் 13: TRV

Haylayt

Ibahagi

Kopyahin

None

Gusto mo bang ma-save ang iyong mga hinaylayt sa lahat ng iyong device? Mag-sign up o mag-sign in

Video para sa யோவான் 13