இனியும் பயத்தில் வாழவேண்டாம் மாதிரி

இனியும் பயத்தில் வாழவேண்டாம்

5 ல் 4 நாள்

நீ ஆண்டவரைக் கண்டு பயப்படுகிறாயா?

நாம் ஏதேன் தோட்டத்தில் இருக்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். பாவத்தினால் உண்டான வீழ்ச்சிக்குப் பிறகு ஆதாமும் ஏவாளும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், அவருக்கு எதிராகப் பாவம் செய்தனர். அவர்கள் புசிக்கக் கூடாது என்று தங்களுக்கு விலக்கப்பட்ட கனியைப் புசித்தனர். அதனால் ஆண்டவரோடு அவர்களுக்கிருந்த ஐக்கியம் முறிந்துவிட்டது. முதன்முதலில் பாவம் பிரிவினையையும், பிரிவையும் கொண்டுவந்தது. இதைப் பற்றி நீ எப்போதாவது யோசித்திருக்கிறாயா? அதுதான் பயம். இத்தருணத்தில், பாவத்தில் மனிதன் வீழ்ந்த பிறகுதான் வேதாகமத்தில் முதன்முறையாக பயம் குறித்து குறிப்பிடப்படுகிறது.

"அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.’’ (ஆதியாகமம் 3:10)

ஆதாம் ஏன் பயந்தான்? அவனது நிர்வாணத்தையும் அவனது கீழ்ப்படியாமையையும் பற்றிய அவனது திடீர் விழிப்புணர்வு பயத்தை எழுப்பியது. மோசமான விஷயம் என்னவென்றால், இந்தப் பயம், அவனை ஆண்டவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள வழிவகுத்தது. அவனை சிருஷ்டித்து, அவனை நேசித்து, கவனித்துக் கொண்டவரிடமிருந்து விலகி அவனை ஒளிந்திருக்க செய்தது இந்தப் பயமேயாகும். ஒவ்வொரு நாளும் ஆண்டவர் அவனோடு உலாவி ஒரு நண்பனைப் போல பேசி வந்தார்!

நீ பயத்தில் வாழும்போது ஆண்டவருடைய பிரசன்னத்தை விட்டுவிலகி ஓடிவிடுவாய். நீ எதிர்கொள்ளவிருக்கும் அனைத்து விதமான காரியங்களையும் சந்தித்து தொடர்ந்து முன்னோக்கிச் செல்லத்தக்க வலிமையை நீ அவரது சமூகத்தில் பெறுவாய், அவரது சமூகத்தில் தான் நீ மன்னிப்பு, கிருபை ஆகியவற்றைப் பெறமுடியும்!

ஒருவேளை குற்ற உணர்வானது பிதாவிடம் உன்னை நெருங்கவிடாமல் தடுக்கலாம்... இருப்பினும், உவமையில் சொல்லப்பட்டுள்ள ஊதாரி மகனின் தந்தை தன் கரங்களை விரித்து காத்திருந்ததைப்போல, அவர் உனக்காக விரித்த கரங்களுடன் காத்திருக்கிறார் (லூக்கா 15:11-24). உன் இதயத்தின் வாசலில் அவர் உனக்காகக் காத்திருக்கிறார். நீ அவருக்கு கதவைத் திற... உனக்குள் வர அவருக்கு இடங்கொடு. அவர் உன் ஆத்துமாவையும், உன் ஆவியையும், உன் வாழ்க்கையையும் மீட்டெடுக்கட்டும்.

ஆண்டவர் உன்னை நேசிக்கிறார்; உனக்கு மன்னிப்பு தேவைப்படுமாயின், அவரிடம் அதைக் கேட்கும்போது, அவர் உன்னை மன்னிப்பார். உன் வாழ்க்கை, உன் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இன்று, கர்த்தருடைய இந்த இனிய அழைப்பை நீ உணர்ந்தால், அவருக்குக் கீழ்ப்படிய தவறாதே... உன் இருதயத்தையும் ஆவியையும் ஆராய பரிசுத்த ஆவியானவரை அழை. நீ அவ்வாறு செய்ய விரும்புகிறாயா? அப்படியானால், என்னுடன் சேர்ந்து ஜெபி…

“ஆண்டவரே, நான் குற்ற உணர்வுள்ளவனாய் இருப்பதாலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர் அல்ல என்பதாலும், சில சமயங்களில் உமது சமூகத்தில் வந்து உம்முடன் பேசுவதற்கு நான் பயப்படுகிறேன்; உம்மை தைரியத்தோடு நெருங்கவிடாமல் என்னைத் தடுப்பது எது என்பதை இப்போது எனக்கு வெளிப்படுத்தி, அதிலிருந்து விடுபட எனக்கு உதவி புரிவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

இனியும் பயத்தில் வாழவேண்டாம்

பயம் மற்றும் பதட்டத்தை கையாள்வது உனக்கு கடினமாக இருக்கலாம். பயத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது மற்றும் உன் பயத்தை நீ எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இங்கே விரிவாக காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=fear
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்