சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி
பயத்தை மேற்கொள்ளுதல்
பயத்திற்கு எதிர்சொல் தைரியம் என்றோ, பெலன் என்றோ அநேகர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பயத்திற்கு உண்மையான எதிர்ச்சொல் விசுவாசம். பயம் ஒருவருக்குள் வரும்போது அவருடைய சமாதானத்தின் அடித்தளமாம் விசுவாசத்தை கெடுத்து அவர்களை நிலைகுலைய செய்கிறது. பயம், விசுவாசம் இவ்விரண்டையும் நாம் ஒரே இடத்தில் காண முடியாது. பயம் இருந்தால் அங்கே விசுவாசம் இல்லை என்றே அர்த்தம்.
நம் பிரச்சனைகளின் போது, நம்மோடு கூட தேவன் இருக்கிறார், எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை விட்டு விலகாமல் நம்மை கரம் பிடித்து நடத்துவார் என்கிற விசுவாசம் குறைந்து, சந்தேகம் எழும்போது தான் பயம் நமக்கும் பிறக்கிறது. விசுவாசம் இருக்குமாயின், "என்ன பிரச்சனை வந்தால் என்ன, தேவன் என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்" என்று தைரியமாக சொல்வீர்கள்.
பெரும்பான்மையான சூழ்நிலைகளில் பயத்திற்கு காரணமாக சிலரது மிரட்டும் தொனியிலான வார்த்தைகளோ, செயல்களின் வாயிலான மிரட்டல்களோ தான் காரணமாக இருக்கிறது. நீங்கள் தேவன் மீது விசுவாசம் உடையவராக இருந்தால், "எந்த மிரட்டல்களுக்கும் நான் பயப்படமாட்டேன். என் தேவன் என்னோடு இருந்து என்னை தப்புவிப்பார். பயத்துடன் அல்ல, நான் இதை ஞானத்துடன் எதிர்கொள்வேன். என் தேவன் இந்த சூழல்களை என் வாழ்விலிருந்து தவிர்த்திருக்கக்கூடும். ஆனாலும் அவர் அனுமதித்திருக்கிறார் என்றால், அவர் என்னை தப்புவிக்க வல்லவர் என்பதை விளங்க செய்வதற்காகவே. நான் அவர் மீது கொண்ட விசுவாசத்தை எந்த சூழ்நிலையிலும் இழக்கமாட்டேன்." என்று விசுவாசத்தோடு சொல்லுவீர்கள்.
1 சாமுவேல் 19ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். இஸ்ரவேலின் இராஜாவாகிய சவுல் மேலிருந்த இராஜரீக அபிஷேகம் எடுக்கப்பட்டு, இளைஞனாயிருந்த தாவீதின் மேல் வைக்கப்பட்டிருந்ததை அவன் கண்டபோது, தாவீதுக்கு விரோதமாக எழும்பி, அவனை கொல்ல வகைதேடுகிறான். சவுலின் முழு சேனையும் தாவீதை கொல்ல சுற்றிக்கொண்டிருக்க, தாவீதோ தேவன் தந்த வாக்குத்தத்தின் மீது கொண்ட தன் விசுவாசத்தால், தன்னுடைய பயத்தை மேற்கொள்கிறான். தன்னை இராஜாவுக்குவேன் என்று வாக்குரைத்த தேவன் நிச்சயம் வாக்கை நிறைவேற்றுவார் என்று அவரை விசுவாசித்தான்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகத்திலேயே கூட பெலவீனங்களை, பயத்தை, தயக்கத்தை, நிராகரிப்புகளை, தோல்விகளை கடந்து வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை நாம் கண்டிருக்கிறோம். அவர்களை குறித்து வாசித்திருக்கிறோம். போராட்டங்களை கடந்து வாழ்வில் வென்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மிரட்டல்களை தாண்டி, தேவனுக்காக வைராக்கியமாக நின்று சாதித்த எத்தனையோ கிறிஸ்தவ மிஷினெரிகளையும் நாம் பார்த்திருக்கிறோம். இவைகளின் மூலம் நாம் அறிவது ஒன்று தான். நாம் முன்னேறி செல்வதற்கு, பயம் ஒரு தடையல்ல.
பயத்தின்போது, ஏதோ ஒன்று நடந்துவிடுமோ என்று அது நடப்பதற்கு முன்பதாகவே அவைகளை குறித்து யோசிக்காமல், நிகழ்காலத்தில் தேவன் மீது கொண்ட விசுவாசத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று யோசியுங்கள்.
இன்றைக்கு அநேகர் பயம் என்னும் இருளுக்குள்ளாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நோயினால் ஏற்படும் பயம், பிள்ளைகளை குறித்த நினைவுகளால் ஏற்படும் பயம், எதிர்காலத்தை குறித்த பயம். வேலை போய்விடுமோ என்ற பயம் என்று பல்வேறு கோணங்களில் பயத்திலேயே தங்கள் வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த எல்லாவித பயங்களுக்கும் ஒரே தீர்வு, தேவனை குறித்த சரியான ஒரு அறிவும், அவர் மீது நாம் வைக்கும் விசுவாசமும் தான். அவர் நம்மை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் அன்பு மாறப்போவது இல்லை. நம்மை விடுவிக்கிற அவருடைய வல்லமையும் குறைந்து போவதில்லை என்கிற அசைக்கமுடியாத விசுவாசமே நம் ஆழ்மனதில் சமாதானத்தை கொண்டு வரும். பயத்தை நாம் எளிதில் மேற்கொள்ளலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
More