உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!மாதிரி

“தேவன் நீங்கள் பேசுவதைக்கேட்க ஆவலோடிருக்கிறார்”
ஜெபத்தைப் பிரதானமான தீர்வாகக் கொள்ளாமல், கடைசி அஸ்திரமாக வைத்திருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று, நாம் தேவனைப் பற்றிக்கொண்டிருக்கிற தவறான அபிப்பிராயம். சில வேளைகளில், தேவன் நமது வாழ்வில் தனிப்பட்ட அக்கறையற்றவராக தூரத்தில் இருப்பவராக எண்ணிக்கொண்டிருக்கிறோம். உண்மை என்னவெனில், தேவன் மிக நெருக்கமாக உங்கள் வாழ்வில் அக்கறை கொண்டுள்ளார். அவரது மகிழ்ச்சிக்காகவே உங்களைப் படைத்தார்; உங்கள் மூலமாக உங்களுக்குள் கிரியை ஆற்ற விரும்புகிறார்!
மிக எளிதாக, ஜெபம் என்பது தேவனோடு கொள்ளும் உரையாடல் என்று விளக்கப்படுகிறது. உங்களுக்கு இருக்கும் ஒரு நெருங்கிய நட்பை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களது தேவையின் நேரத்தில் உங்களுக்காக அவர் இருக்கிறார் என்றாலும், தேவைகள் இல்லாத நேரத்திலும் கூட அவரோடு பேசிக்கொண்டிருப்பீர்கள், இல்லையா? உங்களது வாழ்வை அவரோடு பகிர்ந்து கொள்கிறீர்கள், இல்லையா? நல்லது, தேவனும் அப்படிப்பட்ட நெருங்கிய நண்பராக இருக்கவே விரும்புகிறார். நீங்கள் அவரிடத்தில் எதைக்குறித்தும், எல்லாவற்றைக் குறித்தும் பேசலாம்; அவரோடு சிரிக்கலாம்; அன்றாட வாழ்வைப்பற்றிப் பேசலாம்; வெளிப்படையாகப் பேசலாம்; உங்கள் இதய விருப்பங்களை அவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதனுடைய கடைத்தொகை என்னவென்றால், நீங்கள் என்ன பேசினாலும், அவற்றைக் கேட்க தேவன் ஆர்வம் கொண்டுள்ளார்! நீங்கள் அவரோடு நெருங்கிய, பிரத்தியேகமான உரையாடல் கொள்ள வேண்டும் என அவர் பேராவல் கொண்டுள்ளார்.
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்”- வெளி.3:20
தனியாக நம்மோடு விலைமதிப்பில்லா நேரத்தைச் செலவழிக்க விரும்பி, நம் இருதயங்களின் கதவை இயேசு தட்டிக்கொண்டிருக்கிறார். அவரது மெல்லிய சத்தத்தைக்கேட்டு கதவைத் திறப்பதே, தேவ ஆசீர்வாதங்கள் நிறைந்த வெற்றியுள்ள, பலனுள்ள ஜெப வாழ்வைத் தொடங்குவதற்கான ஆரம்பம்.
நமது வாழ்வின் ஆதாரங்களின் ஊற்று அவரே. அவரது அன்பையும் உண்மைத்துவத்தையும் நமக்குக் காட்ட விரும்புகிறார். அவர் சந்திக்க இயலாத பெரிய சவால் ஒன்றுமில்லை. நீங்கள் சொல்லி அவர் கேட்க விரும்புகிறார்.
“ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்”-சங்கீதம் 62:8
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2