செப்பனியா 3:9-17
செப்பனியா 3:9-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன். அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு, தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள். எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான, சிதறுண்ட என் மக்கள், எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன். அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும் நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள் அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள். எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற, சாந்தகுணமுள்ளோரையும், தாழ்மையுள்ளோரையும் உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன். இஸ்ரயேலில் மீந்திருப்போர் அநியாயம் செய்யமாட்டார்கள்; அவர்கள் பொய் பேசமாட்டார்கள்; அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை. அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள். ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள். சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, பலமாய்ச் சத்தமிடு; எருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார். இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்; நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய். அந்த நாளில் அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது, “சீயோனே, பயப்படாதே; உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே. உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னை இரட்சிக்க வல்லவர். உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார். அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார். அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.”
செப்பனியா 3:9-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது மக்களெல்லோரும் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்களுடைய மொழியை செம்மையான மொழியாக மாறச்செய்வேன். எத்தியோப்பியாவின் நதிகளுக்கு மறுகரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்செய்கிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் மகளானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, நீ செய்த உன் எல்லாச் செயல்களினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் தங்கள் பெருமையைக்குறித்து மகிழ்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த மலையில் அகங்காரங்கொள்ளமாட்டாய். உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான மக்களை மீதியாக வைப்பேன்; அவர்கள் யெகோவாவுடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயம்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள். மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. யெகோவா உன் ஆக்கினைகளை அகற்றி, உன் எதிரிகளை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகோவா உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்னைக்குறித்து சந்தோஷமாக மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் உன்னை புதியவனாக்குவார்; அவர் உன்னைக்குறித்து கெம்பீரமாகக் களிகூருவார்.
செப்பனியா 3:9-17 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு, நான், தெளிவாக பேசும்படி பிற நாடுகளிலுள்ள ஜனங்களை மாற்றுவேன். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுவார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை தொழுதுகொள்வார்கள். ஜனங்கள் எத்தியோப்பியாவில் ஆற்றுக்கு மறுகரையிலிருந்து வருவார்கள். எனது சிதறிக்கிடக்கும் ஜனங்கள் என்னிடம் வருவார்கள். என்னை தொழுதுகொள்பவர்கள் என்னிடம் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். “பிறகு, எருசலேமே, எனக்கு எதிராக உன் ஜனங்கள் செய்த தீயச் செயல்களுக்காக இனி நீ அவமானம் கொள்வதில்லை. ஏனென்றால், எருசலேமிலிருந்து தீய ஜனங்களை எல்லாம் அகற்றுவேன். நான் அந்த பெருமைக்கொள்கிற ஜனங்களை அழிப்பேன். என் பரிசுத்த பர்வதத்திலே தற்பெருமையுள்ள ஜனங்கள் இனி இருக்கமாட்டார்கள். நான் பணிவும், அடக்கமும் உள்ள ஜனங்களை என் நகரத்தில் (எருசலேமில்) விட்டு வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைப்பார்கள். இஸ்ரவேலில் மீதியுள்ளவர்கள் தீயச் செயல்களைச் செய்யமாட்டார்கள். அவர்கள் பொய்ச் சொல்லமாட்டார்கள். அவர்கள் ஜனங்களிடம் பொய்ச் சொல்லி ஏமாற்றமாட்டார்கள். அவர்கள் ஆடுகளைப்போன்று உண்டு சமாதானமாகப் படுத்திருப்பார்கள். யாரும் அவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள்” என்றார். எருசலேமே, பாடு, மகிழ்ச்சியாக இரு, இஸ்ரவேலே சந்தோஷமாகச் சத்தமிடு. எருசலேமே, மகிழ்ச்சியாக இரு, களிகூரு. ஏனென்றால், கர்த்தர் உனது தண்டனையை நிறுத்திவிட்டார். அவர் உனது பகைவர்களின் உறுதியான கோபுரங்களை அழித்தார். இஸ்ரவேலின் ராஜாவே, கர்த்தர் உன்னோடு உள்ளார். எத்தீமையும் நிகழுவதைக்குறித்து நீ கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில், எருசலேமிற்குச் சொல்லப்படுவது என்னவென்றால், “உறுதியாக இரு. அஞ்ச வேண்டாம்! உனது தேவனாகிய கர்த்தர் உன்னோடு உள்ளார், அவர் பலம் பொருந்திய வீரரைப் போன்றவர். அவர் உன்னைக் காப்பாற்றுவார். அவர், தான் எவ்வளவு தூரம் உன்னில் அன்பு செலுத்துகிறார் எனக் காட்டுவார். அவர் உன்னோடு எவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளார் எனக் காட்டுவார். விழா விருந்தில் கலந்துக்கொள்ளும் ஜனங்களைப்போல அவர் உன்னைப்பற்றி மகிழ்ச்சியடைவார்.”
செப்பனியா 3:9-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய். உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய். அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.