செப்பனியா 3:9-17

செப்பனியா 3:9-17 TAERV

பிறகு, நான், தெளிவாக பேசும்படி பிற நாடுகளிலுள்ள ஜனங்களை மாற்றுவேன். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுவார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை தொழுதுகொள்வார்கள். ஜனங்கள் எத்தியோப்பியாவில் ஆற்றுக்கு மறுகரையிலிருந்து வருவார்கள். எனது சிதறிக்கிடக்கும் ஜனங்கள் என்னிடம் வருவார்கள். என்னை தொழுதுகொள்பவர்கள் என்னிடம் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். “பிறகு, எருசலேமே, எனக்கு எதிராக உன் ஜனங்கள் செய்த தீயச் செயல்களுக்காக இனி நீ அவமானம் கொள்வதில்லை. ஏனென்றால், எருசலேமிலிருந்து தீய ஜனங்களை எல்லாம் அகற்றுவேன். நான் அந்த பெருமைக்கொள்கிற ஜனங்களை அழிப்பேன். என் பரிசுத்த பர்வதத்திலே தற்பெருமையுள்ள ஜனங்கள் இனி இருக்கமாட்டார்கள். நான் பணிவும், அடக்கமும் உள்ள ஜனங்களை என் நகரத்தில் (எருசலேமில்) விட்டு வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைப்பார்கள். இஸ்ரவேலில் மீதியுள்ளவர்கள் தீயச் செயல்களைச் செய்யமாட்டார்கள். அவர்கள் பொய்ச் சொல்லமாட்டார்கள். அவர்கள் ஜனங்களிடம் பொய்ச் சொல்லி ஏமாற்றமாட்டார்கள். அவர்கள் ஆடுகளைப்போன்று உண்டு சமாதானமாகப் படுத்திருப்பார்கள். யாரும் அவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள்” என்றார். எருசலேமே, பாடு, மகிழ்ச்சியாக இரு, இஸ்ரவேலே சந்தோஷமாகச் சத்தமிடு. எருசலேமே, மகிழ்ச்சியாக இரு, களிகூரு. ஏனென்றால், கர்த்தர் உனது தண்டனையை நிறுத்திவிட்டார். அவர் உனது பகைவர்களின் உறுதியான கோபுரங்களை அழித்தார். இஸ்ரவேலின் ராஜாவே, கர்த்தர் உன்னோடு உள்ளார். எத்தீமையும் நிகழுவதைக்குறித்து நீ கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில், எருசலேமிற்குச் சொல்லப்படுவது என்னவென்றால், “உறுதியாக இரு. அஞ்ச வேண்டாம்! உனது தேவனாகிய கர்த்தர் உன்னோடு உள்ளார், அவர் பலம் பொருந்திய வீரரைப் போன்றவர். அவர் உன்னைக் காப்பாற்றுவார். அவர், தான் எவ்வளவு தூரம் உன்னில் அன்பு செலுத்துகிறார் எனக் காட்டுவார். அவர் உன்னோடு எவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளார் எனக் காட்டுவார். விழா விருந்தில் கலந்துக்கொள்ளும் ஜனங்களைப்போல அவர் உன்னைப்பற்றி மகிழ்ச்சியடைவார்.”