சகரியா 8:7-23

சகரியா 8:7-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நிச்சயமாகவே நான் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளிலிருந்து என் மக்களை மீட்பேன். நான் மறுபடியும் அவர்களை எருசலேமில் குடியிருப்பதற்கு அழைத்து வருவேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு உண்மையும் நீதியுமுள்ள இறைவனாய் இருப்பேன்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சேனைகளின் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்ட நாட்களில் இருந்த இறைவாக்கினர்களான ஆகாய், சகரியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்பொழுது நினைவுகூருங்கள். ‘ஆலயம் கட்டப்படும்படிக்கு உங்கள் கைகள் பெலனடையட்டும்’ என்று சொன்னார்கள். அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ, சுமை சுமக்கும் மிருகத்திற்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒருவனாலும் தன் எதிரியின் நிமித்தம், பாதுகாப்பாகத் தன் தொழிலுக்குச் செல்லவும் முடியாதிருந்தது. ஏனெனில், ஒவ்வொருவனையும் அவன் அயலவனுக்கு எதிராக, நானே திருப்பிவிட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ நான் இந்த மக்களில் மீதியாயிருப்போரை, முந்தைய நாட்களில் நடத்தியதுபோல நடத்தப் போவதில்லை” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “இனி விதை நன்கு வளரும், திராட்சைக்கொடி தன் பலனைக் கொடுக்கும், நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்; வானங்கள் பனியைப் பெய்யும், மீதியாயிருக்கும் மக்களுக்கு நான் இவைகளையெல்லாம் சொத்துரிமையாகக் கொடுப்பேன். யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் நாடுகளுக்கிடையில் சாபத்துக்குரியவர்களாய் இருந்தீர்கள். ஆனால் நான் உங்களை மீட்பேன், இப்பொழுதோ நீங்கள் ஒரு ஆசீர்வாதமாயிருப்பீர்கள். பயப்படவேண்டாம், உங்கள் கைகளைப் பெலப்படுத்தி ஆலய கட்டிடவேலையில் ஈடுபடுங்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “கடந்த வருடங்களில் உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டிய போது உங்கள்மேலும் தீங்கு வருவிக்கத் தீர்மானித்து, இரக்கம் காட்டாதிருந்தேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “அதேபோல நான் இப்பொழுது யூதாவுக்கும், எருசலேமுக்கும் திரும்பவும் நன்மை செய்வது எனத் தீர்மானித்துள்ளேன். நீங்கள் பயப்படவேண்டாம். நான் அதை நிச்சயம் செய்வேன். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவைகளே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையையே பேசுங்கள்; நீதிமன்றங்களில் உண்மையாயும், நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள். உங்கள் அயலவனுக்கு எதிராகத் சதித்திட்டம் வகுக்க வேண்டாம். பொய் சத்தியம் செய்ய பிரியப்பட வேண்டாம். இவையனைத்தையும் நான் வெறுக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில் நீங்கள் செய்யும் உபவாசங்கள், யூதாவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிற கொண்டாட்டங்களாகவும், மகிழ்ச்சி தரும் பண்டிகைகளாகவும் மாறும். ஆதலால் உண்மையையும், சமாதானத்தையும் விரும்புங்கள்.” மேலும் சேனைகளின் யெகோவா சொல்வதாவது: “பல மக்கள் கூட்டங்களும், பல நகரக் குடிகளும் இன்னும் வருவார்கள். அப்பொழுது ஒரு நகரத்தின் குடிகள் இன்னொரு நகரத்திற்குப் போய், ‘சேனைகளின் யெகோவாவைத் தேடவும், யெகோவாவின் தயவுக்காக அவரை மன்றாடவும், நாங்கள் போகிறோம். நீங்களும் வாருங்கள். உடனே போவோம்’ என்று சொல்வார்கள். எனவே அநேக மக்கள் கூட்டங்களும், வலிமைவாய்ந்த நாடுகளும் சேனைகளின் யெகோவாவின் சமுகத்தைத் தேடவும், அவரிடம் தயவை நாடி மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் பல மொழிகளைப் பேசுவோரிலும் பல மக்களிலுமிருந்து பத்து மனிதர்கள் ஒரு யூதனின் உடையின் தொங்கலைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, ‘இறைவன் உம்மோடிருக்கிறார் எனக் கேள்விப்பட்டோம்; அதனால் நாங்களும், உம்முடனே எருசலேமுக்கு வருகிறோம், என்று சொல்வார்கள்.’ ”

சகரியா 8:7-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இந்நாட்களுக்கு முன்னே மனிதனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கடியினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனிதர்களையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த மக்களில் மீதியானவர்கள் இதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருப்பதற்காக நான் உங்களைக் காப்பாற்றுவேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள். ஒருவனும் பிறனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும், பொய் சத்தியத்தின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான்காம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இன்னும் மக்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் யெகோவாவை தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக மக்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் யெகோவாவை தேடவும், யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம் செய்யவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.

சகரியா 8:7-23 பரிசுத்த பைபிள் (TAERV)

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக் கல்லைப் போட்டபோது சொன்னது. அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அதுபோன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “இந்த ஜனங்கள் சமாதானத்தோடு நடுவார்கள். அவர்களின் திராட்சைச் கொடிகள் திராட்சைகளைத் தரும். நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மேகங்கள் மழையைத்தரும். நான் எனது ஜனங்களுக்கு இவற்றையெல்லாம் தருவேன். ஜனங்கள் தமது சாபங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் நான் இஸ்ரவேலையும், யூதாவையும் காப்பாற்றுவேன். அவற்றின் பெயர்கள் ஆசீர்வாதங்களாக மாறும் எனவே அஞ்ச வேண்டாம். உறுதியாய் இருங்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். “ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும். உனது அயலார்களைத் துன்புறுத்த ரகசியத் திட்டங்களைப் போடவேண்டாம். பொய்யான வாக்குறுதிகளை செய்யவேண்டாம். நீங்கள் அவற்றைச் செய்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால், நான் அவற்றை வெறுக்கிறேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார். நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இச்செய்தியைப் பெற்றேன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களுக்குத் துக்கம் கொள்ளவும், உபவாசம் இருக்கவும், நாலாவது மாதத்திலும், ஐந்தாவது மாதத்திலும், ஏழவாவது மாதத்திலும், பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள் இருக்கும். அந்தத் துக்கத்துக்குரிய நாட்களை மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும். அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் உண்மையையும் சமாதானத்தையும் நேசிக்க வேண்டும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “எதிர்காலத்தில், எருசலேமிற்கு பல நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள். அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள். மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து அநேக ஜனங்கள் வருவார்கள். அவர்கள் அவரை தொழுதுகொள்வதற்காக வருவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேவ்வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”

சகரியா 8:7-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும், தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.