சகரியா 8:7-23

சகரியா 8:7-23 TAERV

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக் கல்லைப் போட்டபோது சொன்னது. அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அதுபோன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “இந்த ஜனங்கள் சமாதானத்தோடு நடுவார்கள். அவர்களின் திராட்சைச் கொடிகள் திராட்சைகளைத் தரும். நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மேகங்கள் மழையைத்தரும். நான் எனது ஜனங்களுக்கு இவற்றையெல்லாம் தருவேன். ஜனங்கள் தமது சாபங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் நான் இஸ்ரவேலையும், யூதாவையும் காப்பாற்றுவேன். அவற்றின் பெயர்கள் ஆசீர்வாதங்களாக மாறும் எனவே அஞ்ச வேண்டாம். உறுதியாய் இருங்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். “ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும். உனது அயலார்களைத் துன்புறுத்த ரகசியத் திட்டங்களைப் போடவேண்டாம். பொய்யான வாக்குறுதிகளை செய்யவேண்டாம். நீங்கள் அவற்றைச் செய்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால், நான் அவற்றை வெறுக்கிறேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார். நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இச்செய்தியைப் பெற்றேன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களுக்குத் துக்கம் கொள்ளவும், உபவாசம் இருக்கவும், நாலாவது மாதத்திலும், ஐந்தாவது மாதத்திலும், ஏழவாவது மாதத்திலும், பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள் இருக்கும். அந்தத் துக்கத்துக்குரிய நாட்களை மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும். அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் உண்மையையும் சமாதானத்தையும் நேசிக்க வேண்டும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “எதிர்காலத்தில், எருசலேமிற்கு பல நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள். அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள். மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து அநேக ஜனங்கள் வருவார்கள். அவர்கள் அவரை தொழுதுகொள்வதற்காக வருவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேவ்வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”