சகரியா 8:7-16
சகரியா 8:7-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.
சகரியா 8:7-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நிச்சயமாகவே நான் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளிலிருந்து என் மக்களை மீட்பேன். நான் மறுபடியும் அவர்களை எருசலேமில் குடியிருப்பதற்கு அழைத்து வருவேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு உண்மையும் நீதியுமுள்ள இறைவனாய் இருப்பேன்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சேனைகளின் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்ட நாட்களில் இருந்த இறைவாக்கினர்களான ஆகாய், சகரியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்பொழுது நினைவுகூருங்கள். ‘ஆலயம் கட்டப்படும்படிக்கு உங்கள் கைகள் பெலனடையட்டும்’ என்று சொன்னார்கள். அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ, சுமை சுமக்கும் மிருகத்திற்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒருவனாலும் தன் எதிரியின் நிமித்தம், பாதுகாப்பாகத் தன் தொழிலுக்குச் செல்லவும் முடியாதிருந்தது. ஏனெனில், ஒவ்வொருவனையும் அவன் அயலவனுக்கு எதிராக, நானே திருப்பிவிட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ நான் இந்த மக்களில் மீதியாயிருப்போரை, முந்தைய நாட்களில் நடத்தியதுபோல நடத்தப் போவதில்லை” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “இனி விதை நன்கு வளரும், திராட்சைக்கொடி தன் பலனைக் கொடுக்கும், நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்; வானங்கள் பனியைப் பெய்யும், மீதியாயிருக்கும் மக்களுக்கு நான் இவைகளையெல்லாம் சொத்துரிமையாகக் கொடுப்பேன். யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் நாடுகளுக்கிடையில் சாபத்துக்குரியவர்களாய் இருந்தீர்கள். ஆனால் நான் உங்களை மீட்பேன், இப்பொழுதோ நீங்கள் ஒரு ஆசீர்வாதமாயிருப்பீர்கள். பயப்படவேண்டாம், உங்கள் கைகளைப் பெலப்படுத்தி ஆலய கட்டிடவேலையில் ஈடுபடுங்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “கடந்த வருடங்களில் உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டிய போது உங்கள்மேலும் தீங்கு வருவிக்கத் தீர்மானித்து, இரக்கம் காட்டாதிருந்தேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “அதேபோல நான் இப்பொழுது யூதாவுக்கும், எருசலேமுக்கும் திரும்பவும் நன்மை செய்வது எனத் தீர்மானித்துள்ளேன். நீங்கள் பயப்படவேண்டாம். நான் அதை நிச்சயம் செய்வேன். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவைகளே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையையே பேசுங்கள்; நீதிமன்றங்களில் உண்மையாயும், நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள்.
சகரியா 8:7-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இந்நாட்களுக்கு முன்னே மனிதனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கடியினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனிதர்களையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த மக்களில் மீதியானவர்கள் இதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருப்பதற்காக நான் உங்களைக் காப்பாற்றுவேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள்.
சகரியா 8:7-16 பரிசுத்த பைபிள் (TAERV)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களை இங்கே மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் எருசலேமில் வாழ்வார்கள். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் நல்ல உண்மையுள்ள தேவனாக இருப்பேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக் கல்லைப் போட்டபோது சொன்னது. அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன். ஆனால் இப்பொழுது அதுபோன்றில்லை. மீதியானவர்களுக்கு நான் முன்பு போன்று இருக்கமாட்டேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “இந்த ஜனங்கள் சமாதானத்தோடு நடுவார்கள். அவர்களின் திராட்சைச் கொடிகள் திராட்சைகளைத் தரும். நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மேகங்கள் மழையைத்தரும். நான் எனது ஜனங்களுக்கு இவற்றையெல்லாம் தருவேன். ஜனங்கள் தமது சாபங்களில் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் நான் இஸ்ரவேலையும், யூதாவையும் காப்பாற்றுவேன். அவற்றின் பெயர்கள் ஆசீர்வாதங்களாக மாறும் எனவே அஞ்ச வேண்டாம். உறுதியாய் இருங்கள்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். “ஆனால் இப்பொழுது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். அதே வழியில் நான் எருசலேமிற்கும், யூத ஜனங்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும். நீங்கள் அயலாரிடம் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் நகரங்களில் நீங்கள் முடிவெடுக்கும்போது உண்மையானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். அது சமாதானத்தைக் கொண்டுவரும்.