சகரி 8:7-16

சகரி 8:7-16 IRVTAM

இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இந்நாட்களுக்கு முன்னே மனிதனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கடியினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனிதர்களையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். இப்போதோ இந்த மக்களில் மீதியானவர்களுக்கு நான் முந்தின நாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த மக்களில் மீதியானவர்கள் இதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ள கட்டளையிடுவேன். சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருப்பதற்காக நான் உங்களைக் காப்பாற்றுவேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, இந்நாட்களில் எருசலேமிற்கும் யூதாவிற்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனுடன் உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்கும் சமாதானத்திற்கும் ஏற்றபடி நியாயந்தீருங்கள்.