சகரியா 1:13-21
சகரியா 1:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், யெகோவா அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார். அதன்பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவி: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் எருசலேமிலும், சீயோனிலும் வைத்த அதிக அன்பினால் வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஆனால் பாதுகாப்புடன் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கும், பிற மக்கள்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் எனது மக்கள்மேல் சிறிதளவு மட்டுமே கோபமாயிருந்தேன். அப்போது, பிற நாடுகளோ அவர்கள்மேல் பேராபத்தை அதிகரித்து எனது மக்களை அழிக்கப் பார்த்தார்கள்.’ “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இரக்கத்தோடு எருசலேமுக்குத் திரும்புவேன்; அங்கே எனது ஆலயம் மறுபடியும் கட்டப்படும். எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படும்’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘என் நகரங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; யெகோவா மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்றான்.’ ” அதன்பின்பு நான் பார்த்தபோது அங்கே எனக்கு முன்னால் நான்கு கொம்புகள் இருந்தன. நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “யூதாவையும், இஸ்ரயேலையும், எருசலேமையும் சிதறடித்த வல்லமையான நாடுகள் இவைகளே” என்று பதிலளித்தான். அதன்பின் யெகோவா எனக்கு கைவினைஞர் நால்வரைக் காண்பித்தார். “இவர்கள் என்ன செய்ய வருகிறார்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர், “யூதாவில், ஒருவனும் தன் தலையைத் தூக்காதவாறு, யூதாவைச் சிதறடித்த பிற மக்களான இந்த கொம்புகளை வெட்டி முறிக்கவும், அவர்களைப் பயமுறுத்தவுமே இந்தக் கைவினைஞர் வருகின்றார்கள். பிறநாடுகள் யூதா நாட்டு மக்களைச் சிதறடிப்பதற்காக, தங்கள் வல்லமையைப் பயன்படுத்த வந்தார்கள் என்றார்.”
சகரியா 1:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா, என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார். அப்பொழுது என்னுடன் பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன். ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று யெகோவா சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூறு என்றார். இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார். நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன். அவைகள் என்னவென்று என்னுடன் பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும் சிதறடித்த தேசங்கள் என்றார். பின்பு யெகோவா எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காண்பித்தார். இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கமுடியாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த தேசங்களுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.
சகரியா 1:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார். பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன். நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன். நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன். ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.” எனவே கர்த்தர் கூறுகிறார்: “நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன். அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.” தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும். நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன். நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’ என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான். பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன். பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவர், “இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின” என்றார். பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார். நான் அவரிடம், “இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?” எனக் கேட்டேன். அவர், “இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்துபோட வந்திருக்கின்றனர். அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி ‘எறிந்தன.’ அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை. அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல் நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன” என்றார்.
சகரியா 1:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார். அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார். இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத்தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார். நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன். அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக்கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார். பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார். இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.