சகரியா 1:13-21

சகரியா 1:13-21 TCV

அதற்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், யெகோவா அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார். அதன்பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவி: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் எருசலேமிலும், சீயோனிலும் வைத்த அதிக அன்பினால் வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஆனால் பாதுகாப்புடன் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கும், பிற மக்கள்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் எனது மக்கள்மேல் சிறிதளவு மட்டுமே கோபமாயிருந்தேன். அப்போது, பிற நாடுகளோ அவர்கள்மேல் பேராபத்தை அதிகரித்து எனது மக்களை அழிக்கப் பார்த்தார்கள்.’ “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இரக்கத்தோடு எருசலேமுக்குத் திரும்புவேன்; அங்கே எனது ஆலயம் மறுபடியும் கட்டப்படும். எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படும்’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘என் நகரங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; யெகோவா மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்றான்.’ ” அதன்பின்பு நான் பார்த்தபோது அங்கே எனக்கு முன்னால் நான்கு கொம்புகள் இருந்தன. நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “யூதாவையும், இஸ்ரயேலையும், எருசலேமையும் சிதறடித்த வல்லமையான நாடுகள் இவைகளே” என்று பதிலளித்தான். அதன்பின் யெகோவா எனக்கு கைவினைஞர் நால்வரைக் காண்பித்தார். “இவர்கள் என்ன செய்ய வருகிறார்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர், “யூதாவில், ஒருவனும் தன் தலையைத் தூக்காதவாறு, யூதாவைச் சிதறடித்த பிற மக்களான இந்த கொம்புகளை வெட்டி முறிக்கவும், அவர்களைப் பயமுறுத்தவுமே இந்தக் கைவினைஞர் வருகின்றார்கள். பிறநாடுகள் யூதா நாட்டு மக்களைச் சிதறடிப்பதற்காக, தங்கள் வல்லமையைப் பயன்படுத்த வந்தார்கள் என்றார்.”