உன்னதப்பாட்டு 6:4-13

உன்னதப்பாட்டு 6:4-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்? பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன். நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று. திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா.

உன்னதப்பாட்டு 6:4-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம். ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள். சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்? பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். நான் புரிந்துகொள்ளும் முன்னமே, என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு அழைத்துச் சென்றது. திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா!

உன்னதப்பாட்டு 6:4-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக, சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்? பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். நினைக்காததற்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது. மணவாளியின் தோழிகள் திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. மணவாளி சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.

உன்னதப்பாட்டு 6:4-13 பரிசுத்த பைபிள் (TAERV)

என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள். எருசலேமைப்போன்று இனிமையானவள். நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள். என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன. உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும் வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது. உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப் போன்றுள்ளன. அறுபது ராணிகள் இருக்கலாம் எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம். ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான குமாரத்தி. அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள். யார் இந்த இளம் பெண்? விடியலின் வானம்போல் பிரகாசிக்கிறாள். நிலவைப்போல் அழகாக இருக்கிறாள். சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள். வானத்தில் உள்ள படைகளைப்போல் கம்பீரமாக விளங்குகிறாள். பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும், திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும் மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண, நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே, என் ஆத்துமா என்னை ராஜாக்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது. திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா, திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்? அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.