உன்னதப்பாட்டு 6:4-13

உன்னதப்பாட்டு 6:4-13 TCV

என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம். ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள். சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்? பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். நான் புரிந்துகொள்ளும் முன்னமே, என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு அழைத்துச் சென்றது. திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா!