ரூத் 4:1-12

ரூத் 4:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்கிடையில் போவாஸ், பட்டண வாசலுக்குச் சென்று அங்கே உட்கார்ந்தான். அப்பொழுது போவாஸ் முன்பு குறிப்பிட்ட அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன் அவ்வழியே வந்தான். போவாஸ் அவனிடம், “என் நண்பனே இங்கே வந்து உட்காரு” என்றான். அவனும் அங்குபோய் உட்கார்ந்தான். போவாஸ் பட்டணத்து முதியவர்களில் பத்துபேரை கூட்டிக்கொண்டுவந்து, “இங்கே உட்காருங்கள்” என்றான். அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது போவாஸ் மீட்கும் உரிமையுடைய அந்த உறவினனிடம், “எலிமெலேக் என்னும் நம் சகோதரனுக்குச் சொந்தமான நிலத்துண்டை, மோவாபிலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். இதை நான் உன் கவனத்திற்குக் கொண்டுவருவது நல்லது என நினைத்தேன். எனவே இங்கு அமர்ந்திருப்பவர்களின் முன்னிலையிலும், என் மக்களின் முதியவர்களின் முன்னிலையிலும் நீ அதை வாங்க வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பினால் மீட்டுக்கொள். உனக்கு விருப்பமில்லையென்றால் நான் அறியும்படி எனக்குச் சொல். இதை மீட்கும் உரிமை உன்னைத்தவிர வேறொருவனுக்கும் இல்லை; உனக்கடுத்ததாக எனக்கே உரிமையுண்டு. நான் அதை மீட்பேன்” என்றான். அதற்கு அவன், “நான் அவ்வயலை மீட்டுக்கொள்கிறேன்” என்றான். அப்பொழுது போவாஸ், “நீ நகோமியிடமிருந்து அந்த நிலத்தை வாங்கும் அந்த நாளிலே, இறந்துபோனவனின் மனைவி ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினன் பெயரையும், அவனுடைய உடைமையையும் பராமரிக்க வேண்டும்” என்றான். அதற்கு அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன், “அப்படியாயின் அந்நிலத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியாது. அப்படி மீட்டுக்கொண்டால், நான் என் சொந்த உடைமையை இழக்க நேரிடலாம். நீயே அதை வாங்கி மீட்டுக்கொள். என்னால் அதை மீட்கமுடியாது” என்றான். இஸ்ரயேலில் முற்காலத்திலிருந்து வரும் வழக்கப்படி, மீட்கிறதிலும், சொத்துரிமையை மாற்றுகிறதிலும் அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ஒருவன் தன் செருப்பைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ரயேலில் சொத்து மாற்றங்களைச் சட்டபூர்வமாக்கும் முறைமையாயிருந்தது. எனவே மீட்கும் உரிமையுடைய உறவினன் போவாஸிடம், “நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி தன் செருப்பைக் கழற்றிப் போட்டான். அப்பொழுது போவாஸ் அங்கிருந்த பெரியோரையும், மக்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னதாவது, “இன்று நான் எலிமெலேக்கிற்கும் அவன் பிள்ளைகளான கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்கும் உரிய உடைமைகள் யாவற்றையும் நகோமியிடமிருந்து வாங்கிவிட்டேன் என்பதற்கு, நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான். “மக்லோனின் மனைவியாயிருந்த ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் நான் என் மனைவியாக, எனக்கு உரிமையாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு இறந்தவனுடைய பெயரை அவனுடைய சொத்துடன் அழியாமல் பராமரிப்பேன். இவ்விதமாக அவனுடைய பெயர் குடும்பத்தின் மத்தியிலிருந்தோ, அல்லது பட்டணத்தின் பதிவேடுகளிலிருந்தோ அழிந்துபோகாதிருக்கும். இதற்கு இன்று நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான். அப்பொழுது முதியவர்களும், பட்டண வாயிலிலிருந்த மற்றெல்லோரும் அவனிடம் சொன்னதாவது: “ஆம்! நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். உன் வீட்டிற்கு மனைவியாக வரப்போகிற இப்பெண்ணை யெகோவா, இஸ்ரயேலின் வீட்டைக் கட்டியெழுப்பிய ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும் ஆக்குவாராக! எப்பிராத்தில் செல்வந்தனாயிருந்து, பெத்லெகேமிலே பெயர் பெற்றிருப்பாயாக. இந்த இளம்பெண் வழியாக யெகோவா உனக்குக் கொடுக்கவிருக்கும் சந்ததியினரால் உன் குடும்பம் தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பேரேஸின் குடும்பத்தைப்போல் இருப்பதாக!” என வாழ்த்தினார்கள்.

ரூத் 4:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓ அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான். அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான். அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான். மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் எல்லாக் காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன்னுடைய காலணியைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழக்கமாக இருந்த உறுதிப்பாடு. அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான். அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. இதுவுமல்லாமல், இறந்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபியப் பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான். அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் யெகோவா இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். இந்தப் பெண்ணிடம் யெகோவா உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.

ரூத் 4:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான். பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர். பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப்போகிறாள். நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான். பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான். அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.) எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான். பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன். நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான். நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக! தாமார் யூதாவுக்குப் பேரேசை குமாரனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.

ரூத் 4:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான். அப்பொழுது போவாஸ்: நீரே நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான். அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான். மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு. அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான். அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான். அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.